கள்ளுக்கடை, 5 மொழி கொள்கை வரும்.... டாஸ்மாக் படிப்படியா குறைப்போம் - அண்ணாமலை வாக்குறுதி
தமிழ்நாட்டில் பாஜக ஆட்சிக்கு வந்தால் 5 மொழிக் கொள்கை தமிழ்நாட்டில் அமல்படுத்தபடும் என கூறியுள்ளார் அண்ணாமலை. மீண்டும் கள்ளுக்கடை திறப்போம் என்றும் அவர் வாக்குறுதி அளித்துள்ளார்.
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வேலூர் மாவட்டம் குடியாத்தம் சவுக்கு தோப்பு பகுதியில் இருந்து புதிய பேருந்து நிலையம் வரை என் மண் என் மக்கள் பாத யாத்திரியை மேற்கொண்டார். பின்னர் அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், தமிழக அரசியலில் மாற்றம் வேண்டும் என்பதை மக்கள் விரும்புகின்றனர். பிரதமர் நரேந்திர மோடியின் பத்தாண்டு கால ஆட்சியில் இந்தியாவின் வளர்ச்சி அதிகரித்துள்ளது. 2014 முதல் 24 ஆம் ஆண்டு வரை ஊழல் இல்லாத ஆட்சியாக பாஜக ஆட்சி அமைந்துள்ளது.
வரும் நாடாளுமன்றத் தேர்தல் சரித்திரம் முக்கியத்துவம் வாய்ந்த தேர்தலாக உள்ளது. எல்லா வளமும் நம் நாட்டில் உள்ளது 1950 ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரை மற்ற நாடுகளை சார்ந்து இந்தியா இருந்தது. கடந்த பத்து ஆண்டுகளில் பிரதமர் மோடியின் ஆட்சியில் சுயசார்பு பாரதமாக நம் நாடு மாறி உள்ளது. குடியாத்தம் பகுதியில் காமராஜர் ஆட்சி காலத்தில் பாலம் ஒன்று கட்டப்பட்டு இன்றளவும் கம்பீரமாக நிற்கிறது. இதற்குக் காரணம் அவரின் ஊழல் இல்லாத ஆட்சி தான். திமுக ஆட்சியில் இது போன்ற பாலங்கள் இல்லை.
குழந்தைகளின் வளர்ச்சியை தடுக்கும் ஆட்சியாக தமிழ்நாட்டின் திமுக ஆட்சி உள்ளது. மத்திய அரசு தரமான கல்வி வழங்க நவோதயா பள்ளிகளை துவக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் தமிழக அரசு நவோதயா பள்ளிகள் வேண்டாம் என்று கூறுகின்றனர். நவோதயா என்ற பெயர் வேண்டாம் என்றாலும் கூட காமராஜர் பள்ளிகள் என்று பெயர் மாற்றி செயல்படுத்த கூட மத்திய அரசு தயாராக உள்ளது.
மேலும்படிக்க | விஜய் தொடங்கிய கட்சிக்கு எங்கள் வாழ்த்துக்கள்: அமைச்சர் முத்துசாமி
ஆனால் தமிழக அரசு தரமான பள்ளிகள் அமைவதை தடுக்கின்றனர். உலக அளவில் இளைஞர்கள் வெளிநாடுகளுக்குச் சென்று பணிபுரிய பல்வேறு மொழிகளை கற்றுக் கொள்வது அவசியம். எனவே வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் போது அனைத்து பள்ளிகளிலும் ஐந்து மொழி கல்விக் கொள்கை கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும்.
தாய்மொழி முக்கியம் ஆங்கில கல்வி மற்றும் பிற மொழிகளையும் கற்றுக் கொள்வது குழந்தைகளின் எதிர்கால வளர்ச்சிக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும். உலக அளவில் இந்தியா வணிகத் தளமாக மாற இருப்பதால் இதற்கு இளைஞர்களுக்கு பல்வேறு மொழிகள் கற்றுக்கொள்வது அவசியமாக உள்ளது.
இதற்கு திராவிட கட்சிகள் எதிராக செயல்படுகின்றனர். பாஜக ஆட்சி அமைந்த உடன் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் மூன்று ஆண்டுகளில் படிப்படியாக அகற்றப்பட்டு கள்ளுக்கடைகள் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
திமுகவின் ஊழல் ஆட்சியால் தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி பின்னுக்கு தள்ளப்பட்டு வருகிறது. பொருளாதார வளர்ச்சியில் இரண்டாவது இடத்தில் இருந்த தமிழகம் தற்போது மூன்றாவது இடத்தில் உள்ளது" என பேசினார்.
மேலும் படிக்க | முரசொலி நில வழக்கு மீதான விசாரணை பிப்ரவரி 12ம் தேதிக்கு ஒத்தி வைப்பு!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ