ஆம்ஸ்ட்ராங் படுகொலை: `அரசியல் பின்னணி இல்லை` - போலீசார் சொல்வது என்ன?
Armstrong Murder Case Updates: அரசியல் அடிப்படையில் கொலை நடந்துள்ளதாக எந்த ஆதாரமும் இல்லை என ஆம்ஸ்ட்ராங் கொலை சம்பவம் குறித்து சென்னை வடக்கு மண்டல கூடுதல் ஆணையர் அஸ்ரா கார்க் தெரிவித்துள்ளார்.
BSP Leader Armstrong Murder Case Latest News Update: பகுஜன் சமாஜ்வாதி கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை 5ஆம் தேதி இரவு சென்னை பெரம்பூர் பகுதியில் ஒரு கும்பலால் வெட்டி கொலை செய்யப்பட்டார். சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டது.
உடற்கூராய்வுக்குப் பிறகு அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதுகுறித்து சென்னை அயனாவரம் காவல் நிலையத்தில் சென்னை வடக்கு மண்டல கூடுதல் ஆணையர் அஸ்ரா கார்க் ஐபிஎஸ் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அதில் அவர் பேசியதாவது,"எனது தலைமையில் 10 தனிப்படைகள் அமைத்து 4 மணி நேரத்தில் 8 நபர்கள் சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்து கைது செய்துள்ளோம். கைது செய்யப்பட்டவர்களை மீண்டும் விசாரிக்க போலீஸ் காவல் கேட்க உள்ளோம்.
'இதுவரை எந்த ஆதாரமும் இல்லை...'
இதுவரை 7 அரிவாள்கள், 3 பைக்குகளை கைப்பற்றியுள்ளோம். மேலும் 3 நபர்கள் சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்து வருகிறோம். விசாரணை செய்து சரியான ஆதாரங்கள் அடிப்படையில்தான் சரியான நபர்களை கைது செய்துள்ளோம். அப்படி யாருக்காவது சந்தேகம் இருந்தால் எங்களிடம் சொல்லலாம்.
மேலும் படிக்க | சென்னையை நடுங்க வைத்த கொலைகள்! நடுங்க வைக்கும் பின்னணி!
முதற்கட்ட விசாரணையில் சட்டப்படி கைது செய்துள்ளோம். சிசிடிவி மட்டுமின்றி பல்வேறு ஆதாரங்களும் கைப்பற்றி முறைப்படி கைது செய்துள்ளோம். ஆற்காடு சுரேஷ் கொலைக்கு பழிவாங்கும் நோக்கில் இந்த கொலை நடந்துள்ளது. அரசியல் அடிப்படையில் கொலை நடந்துள்ளதாக இதுவரை எந்த ஆதாரமும் இல்லை.
தொடர் விசாரணை
தனியார் உணவு டெலிவரி உடை போட்டுவந்தது ஏன், அங்குள்ள கடைக்கும் கொலைக்கும் தொடர்பு உள்ளதா போன்ற பல்வேறு கோணங்களில் விசாரிக்கப்படுகிறது. இங்கு குற்றங்கள் நடைபெற்றால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. எனவே, மக்கள் எந்த அச்சமும் அடைய வேண்டாம்" என தெரிவித்தார்.
மேலும் 3 பேர் கைது
முன்னதாக, கொலை செய்யப்பட்ட சில மணிநேரங்களிலேயே போலீசாரிடம் 8 பேர் சரணடைந்ததாக தெரிவிக்கப்பட்ட நிலையில், நேற்று பூந்தமல்லி அருகே மூன்று பேர் போலீசாரால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்றிரவு பூந்தமல்லி பஸ் நிலையத்தில் போதையில் சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த மூன்று பேரிடம் ரோந்து பணியில் இருந்த போலீசார் விசாரணை மேற்கொண்டபோது முன்னுக்குப் பின் முரணாக பதில் கூறி உள்ளனர்.
மேலும் போலீசார் விசாரணையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் நீதிமன்றத்தில் சரணடைய வந்திருப்பதாக தெரிவித்ததையடுத்து மூன்று பேரிடமும் போலீசார் விசாரித்துள்ளனர். பிடிபட்டவர்கள் கோகுல், விஜய், சிவசக்தி
என தெரியவந்தது. இதையடுத்து பெரம்பூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்த நிலையில், பெரம்பூர் போலீசார் பூந்தமல்லிக்கு விரைந்து வந்து அந்த மூன்று பேரை கைது செய்து அழைத்து சென்றனர்.
ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி தொடர்ந்து வழக்கு
ஆம்ஸ்ட்ராங்கின் உடல் நேற்று அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், அயனாவரத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு அஞ்சலிக்காக உடல் எடுத்துச்செல்லப்பட்டது. இன்று அவருக்கு இறுதி மரியாதை செலுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த பிஎஸ்பி தேசிய தலைவர் மாயாவதி இன்று சென்னை வர உள்ளார். மேலும், ஆம்ஸ்ட்ராங் உடலை கட்சி அலுவலகத்தில் அடக்கம் செய்ய அனுமதி கோரி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடி தாக்கல் செய்த வழக்கை அவசர வழக்காக, இன்றிரவே விசாரிக்க சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி அனுமதி அளித்த நிலையில், நீதிபதி அனிதா சுமந்த் வீட்டில் வழக்கு விசாரணை நடைபெற்றது. ஆர்ம்ஸ்ட்ராங் உடலை அடக்கம் செய்யும் வழக்கை நீதிபதி அனிதா சுமந்த் விசாரிக்கக் கூடாது என ஆர்ம்ஸ்ட்ராங் தரப்பு வழக்கறிஞர்கள் கடும் அதிருப்தி தெரிவித்தனர். மேலும், மாநகராட்சிகளுக்கான நீதிபதியே விசாரிக்க வேண்டும் என வலியுறுத்தி போராட்டம் நடத்த முடிவெடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகின.
மேலும் படிக்க | ஆம்ஸ்ட்ராங் கொலை : சரண்டைந்தவர்கள் உண்மைக் குற்றவாளிகள் இல்லை - திருமாவளவன்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ