பஸ் ஸ்டிரைக்: ஆட்டோ, டாக்சிகளில் கூடுதல் கட்டணம் வசூல்
சென்னை, கோயம்பேட்டில் இருந்து வெளியூர் செல்லும் பஸ்கள் இயக்கப்படவில்லை. நேற்று இரவே பஸ்கள் ஸ்டிரைக் துவங்கி விட்டதால் ஏராளமானோர் தவித்து வருகின்றனர்.
13_வது ஓய்வூதிய ஒப்பந்தத்தை ஏற்படுத்த வேண்டும், ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளர்களுக்கு அவர்களின் நிலுவைத் தொகையை கணக்கிட்டு வழங்கிட வேண்டும், போக்குவரத்து துறையில் ஏற்பட்டு இருக்கும் நஷ்டத்துக்கு அரசே பொறுப்பேற்று அதனை ஈடுசெய்ய வேண்டும் உள்பட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து துறை நிர்வாக பிரதிநிதிகளுடன், தொழிற்சங்க பிரதிநிதிகள் 2 கட்டங்களாக பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் இந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.
இன்று வேலைநிறுத்தம் தொடங்கும் என போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அறிவித்து இருந்தனர். அதன்படி இன்று தமிழக்கத்தில் போக்குவரத்து போராட்டம் நடைபெற்று வருகின்றது.
இந்நிலையில் ஆட்டோக்கள், டாக்சிகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக மக்கள் குற்றம் சாட்டுகிறார்கள். மேலும், கோயம்பேட்டிலிருந்து சென்னை நகரின் பல பகுதிகளுக்கும் மினி பஸ்களை இயக்க வேண்டும் என்று, மக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.
சென்னையில் அரசு பஸ்கள் இயங்கவில்லை என்பதால், புறநகர் ரயில்களில் கூட்டம் அலைமோதுகிறது. பாதுகாப்புக்காக சென்னையில் போலீசார் தீவிர ரோந்து பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.