சென்னை: நீட் மசோதாக்களை நிராகரித்த காரணத்தை இதுவரை மத்திய அரசு தெரிவிக்கவில்லை. எனவே உரிய பதில் கிடைக்காதபட்சத்தில் மத்திய அரசுக்கு எதிராக வழக்கு தொடருவோம் என தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் கூறியுள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நீட் தேர்வில் விலக்கு கோரும் மசோதாக்கள் திருப்பி அனுப்பப்பட்ட விவகாரம் தொடர்பாக இன்று சட்டசபையில் திமுக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தது. 


அப்பொழுது பேசிய எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியது, “ திருப்பி அனுப்பப்பட்ட மசோதாக்களை 6 மாதத்திற்குள் சட்டமன்றத்தில் வைக்கப்பட வேண்டும் என்பதுதான் விதி. 2017 ஆம் ஆண்டிலேயே குடியரசு தலைவர் நீட் மசோதாக்களை நிராகரித்து 21 மாதங்கள் கடந்த போதிலும், எந்த அழுத்ததையும் தமிழ்நாடு அரசு ஏன் கொடுக்கவில்லை என மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பினார். 


மேலும் நீட் விவகாரத்தில் இனியும் அமைதியாக இருக்கக்கூடாது. மீண்டும் 2 சட்ட மசோதாக்களை நிறைவேற்றி குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்க வேண்டும்.  அப்படி தமிழக அரசு செய்யுமா? எனவும் கேள்வி எழுப்பினார்.


இதற்கு பதில் அளித்த பேசிய தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் கூறியது, நீட் தேர்வு மசோதாக்கள் திருப்பி அனுப்பப்பட்டது குறித்து மத்திய அரசிடம் விளக்கம் கேட்கப்பட்டு உள்ளது. இதுவரை விளக்கம் கேட்டு 12 முறை நினைவூட்டல் கடிதம் அனுப்பியும் நீட் மசோதாக்களை நிராகரித்த காரணத்தை இதுவரை மத்திய அரசு தெரிவிக்கவில்லை. எனவே உரிய பதில் கிடைக்காதபட்சத்தில் மத்திய அரசுக்கு எதிராக வழக்கு தொடருவோம். அதில் தமிழக அரசுக்கு எவ்வித தயக்கமும் இல்லை என்று அமைச்சர் சி.வி.சண்முகம் பதில் அளித்தார்.