திமுக என்றைக்கும் சிறுபான்மையினரை கைவிடாது; CAB எதிராக வாக்களிப்பு: கனிமொழி
2019 குடியுரிமை சட்ட மசோதாவுக்கு எதிராக திமுக வாக்களித்தனர். மேலும் திமு கழகம் என்றைக்கும் சிறுபான்மையினரை கைவிடாது என எம்.பி. கனிமொழி கூறியுள்ளார்.
புது டெல்லி: 2019 குடியுரிமை சட்ட மசோதாவுக்கு எதிராக திமுக எம்.பி-க்கள் வாக்களிக்க வில்லை. வாக்கெடுப்பின் போது வெளிநடப்பு செய்தனர் என சில அரசியல் கட்சிகள் கருத்து தெரிவித்தனர். மேலும் சமூக வலைதளங்களில் திமுக-வுக்கு எதிராக பொய்ப் பிரச்சாரம் மேற்க்கொண்டனர். இதற்கு விளக்கம் அளித்துள்ள திமுக மக்களவை எம்.பி. கனிமொழி, "திமுக என்றைக்கும் சிறுபான்மையினரை கைவிடாது" அவர்களுக்கு ஆதரவாக தான் இருக்கிறது எனக் கூறியுள்ளார்.
அதாவது "பொய்ப் பிரச்சாரத்திற்கு" எதிராக எம்.பி. கனிமொழி தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறியது,
10/12/2019 அன்று பாராளுமன்றத்தில் திமுக உறுப்பினர்கள் இம்மசோதா மீதான விவாதம் முடியும் வரை இருந்து, தளபதி அவர்களின் அறிவுறுத்தலின்படி, இந்த மசோதாவிற்கு (CAB 2019) எதிராக வாக்களித்தனர். நாங்கள் வெளிநடப்புச் செய்தோம் என்ற பொய்ப் பிரச்சாரம் அரசியல் காழ்ப்புணர்ச்சி.
குடியுரிமை சட்ட மசோதா 2019 இஸ்லாமியர்களுக்கு எதிரானது. திமு கழகம் என்றைக்கும் சிறுபான்மையினரை கைவிடாது.
இவ்வாறு அவர் விளக்கம் அளித்துள்ளார்.
பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து இந்தியாவில் குடியேறிய முஸ்லிம் அல்லாத மதப் பிரிவினருக்குக் குடியுரிமை வழங்குவதற்கு வழிவகை செய்யும், குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. ஏற்கனவே மக்களவையில் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது. இன்று மாநிலங்களவையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா தாக்கல் செய்துள்ளார்.
அதாவது இந்த புதிய சட்டத்தில் பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தானை சேர்ந்த இந்துக்கள், சீக்கியர்கள், பௌத்தர்கள், சமணர்கள், பார்சி இனத்தவர் மற்றும் கிறிஸ்தவர்கள் குறைந்தது இந்தியாவில் 6 ஆண்டுகள் வசித்தாலே, எந்தவித ஆவணமும் இல்லையென்றாலும், அவர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கலாம் என்பதே புதிய சட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.
ஆனால் இதில் மிகப்பெரிய பிரச்சனை என்வென்றால், இஸ்லாமியர்கள், இலங்கை தமிழர்கள் மற்றும் ரோஹிஞ்சா முஸ்லீம் போன்றவர்கள் புறக்கணிக்கப்பட்டு உள்ளனர். இதனால் தான் எதிர்கட்சிகள் கேள்விகளை எழுப்புகின்றன. தேசிய குடியுரிமை சட்ட திருத்த மசோதா சிறுபான்மையினருக்குப் பாதுகாப்பு வழங்குவதற்காகத் தான் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதேவேலையில், இஸ்லாமியர்கள், இலங்கை தமிழர்கள் ஏன் புறக்கணிக்கப்பட்டு இருக்கிறது என திமுக உட்பட எதிர்கட்சிகள் என்ற கேள்வியையும் முன் வைக்கிறார்கள். மேலும் நாடாளுமன்றத்தில் இந்த சட்டத்திருத்தம் அறிமுகப்படுத்தப்பட்ட நாளில் இருந்தே, திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இன்று மாநிலங்களவையில் தேசிய குடியுரிமை சட்ட திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. பாஜகவுக்கு போதிய பெரும்பான்மை இல்லாத நிலையில், அ.தி.மு.க., பிஜு ஜனதாதளம், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ், தெலுங்குதேசம் ஆகிய கட்சிகள் ஆதரவு அளிக்கக்கூடும் எனத் தெரிகிறது. ஏற்கனவே அதிமுக ஆதரவு அளிக்கும் என கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. இவர்களின் ஆதரவைப் பெற்றால், பெரும்பான்மைக்கு பலம் கிடைத்துவிடும் என்பதால் அக்கட்சிகளுடன் பாஜக பேச்சு நடத்தி வருகிறது. நாளுமன்ற குளிர் காலக் கூட்டத் தொடர் நாளையுடன் முடிய உள்ளதால், இந்த மசோதாவை இன்றே நிறைவேற்றுவதற்கு மத்திய அரசு தீவிரமாக உள்ளது.
உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.