மே 3 நாடு தழுவிய ஊரடங்கு முடிவடையும் நிலையில், முதல்வர் பழனிசாமி தலைமையில் மே 2ஆம் தேதி தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது..!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வரும் மே 3 ஆம் தேதியுடன் நாடு தழுவிய ஊரடங்கு நிறைவடையும் நிலையில், ஊரடங்கை நீட்டிப்பது குறித்து முடிவெடுப்பதற்காக மே 2 ஆம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் மார்ச் 24 ஆம் தேதி முதல் மே 3 ஆம் தேதி வரை நாடு தழுவிய ஊடரங்கு அமலில் உள்ளது. நாடு தழுவிய ஊடரங்கு அமலில் இருந்தாலும் பொதுமக்களில் வெளியே சுற்றுவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். காவல்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தி அபராதம் மற்றும் நூதன  தண்டனை விதித்தாலும், நாளுக்கு நாள் பொதுமக்கள் வெளியே வருவது அதிகரித்துக் கொண்டே வருகிறது.


குறிப்பாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு 36 நாட்கள் ஆன பிறகும் தமிழகத்தில் கொரோனா பரவல் தற்போது வரை கட்டுக்குள் வர முடியவில்லை. இதனிடையே ஊரடங்கு மீண்டும் நீட்டிக்கப்படுமா?, சில தளர்வுகள் இருக்குமா? என பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளது. இந்நிலையில் மே 3 ஆம் தேதி தேசிய ஊரடங்கு முடிவுக்கு வர உள்ள நிலையில், வரும் மே 2 ஆம் தேதி மாலை தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 


இந்நிலையில், முதல்வர் பழனிசாமி தலைமையில் நடைபெறும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஊரடங்கு தொடர்பாக ஆலோசனை நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக நிபுணர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் ஆலோசனை நடத்தியுள்ள நிலையில், மே 2 ஆம் தேதி நடைபெற இருக்கும் தமிழக அமைச்சரவைக் கூட்டம்  முக்கியத்துவம் வாய்ந்ததாக எதிர்பார்க்கபடுகிறது.