அரசு பள்ளியில் ஆங்கில வழிகல்வி பயிலும் மாணவர்களுக்கு கட்டணம் ரத்து
அரசு பள்ளிகளில் ஆங்கில வழி கல்வி பயிலும் மாணவர்களுக்கும் கட்டண விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது என தமிழக அரசு அறிவித்துள்ளது.
சென்னை: இதுவரை அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வி பயிலும் மாணவர்களிடம் கட்டணம் வசூல் செய்யப்பட்டு வந்தது, தற்போது அந்த கல்விக் கட்டணத்தை ரத்து செய்து தமிழக அரசு அரசாணை கடந்த 29 ஆம் தேதி வெளியிட்டது.
அதுக்குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள ஆணையில் கூறியதாவது:
6 முதல் 12ம் வகுப்புகள் வரை ஆங்கில வழி கல்விக்கான கட்டணம் ரத்து செய்யப்படுகிறது. அதில் மாணவர்கள் தொடர்ந்து படிப்பதற்கு வழி ஏற்படுத்தும் என்றும் அதன் மூலம் தேசிய அளவில் ஆங்கில மொழியில் நடத்தப்படும் பல்வேறு போட்டித்தேர்வுகளை அவர்கள் சுலபமாக எதிர்கொள்ள முடியும் என்றும் பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் அரசுக்கு பரிந்துரைத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் அனைத்தும் அடங்கும் எனக் கூறப்பட்டு உள்ளது.
மேலும் 2019-20 ஆம் கல்வியாண்டில் ஆங்கில வழிக்கல்வியில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் 22,314 மாணவர்களிடம் இருந்து பெறப்பட்ட கல்விக் கட்டணம் ரூ.67 லட்சத்தை திரும்ப ஒப்படைக்க பள்ளிக்கல்வித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது. இதைப் பின்பற்றி நடப்பு கல்வியாண்டு முதல் அனைத்து வகுப்பினருக்கும் ஆங்கில வழி கல்விக்கட்டணத்தை முழுமையாக ரத்து செய்தும் உத்தரவிடப்பட்டுள்ளது.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை ஆங்கில வழிக் கல்வி முறையில் பயிலும் மாணவர்களுக்கான கல்விக் கட்டணம் ரத்து செய்யப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தமிழக சட்டப்பேரவையில் ஏற்கனவே அறிவித்திருந்தார். அந்த அறிவிப்பைத் தொடர்ந்து, தமிழக அரசின் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.