சர்ச்சை பேச்சு!! கமல்ஹாசன் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு
மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் மீது இரண்டு பிரிவுகளின் கீழ் அரவக்குறிச்சி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த 12 ஆம் தேதி கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர் மோகன்ராஜை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பிரசாரம் செய்தார். பிரச்சாரத்தின் போது., "முஸ்லிம்கள் நிறைய இருக்கும் பகுதி என்பதால் இதனை சொல்லவில்லை. காந்தி சிலைக்கு முன்னாள் சொன்னேன். சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து. அவர் பெயர் நாத்ராம் கோட்சே. நான் காந்தியின் மானசீக கொள்ளுபேரன். அந்த கொலைக்கு கேள்வி கேட்க வந்திருக்கிறேன்" எனப் பிரச்சாரம் செய்தார்.
இதைத்தொடர்ந்து கமலின் இந்த கருத்திற்கு பாஜக மற்றும் இந்து அமைப்பு தரப்பில் இருந்து கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பல அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்தநிலையில், மத கலவரத்தை தூண்டும் வகையில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் பேசியதாக, அவர் மீது இரண்டு பிரிவுகளின் கீழ் அரவக்குறிச்சி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மத கலவரத்தை தூண்டும் வகையில் பேசியதாக குற்றவியல் சட்ட 153ஏ பிரிவின் கீழும், பொது இடத்தில் பிரச்சனையை உருவாக்கியதாக 295ஏ பிரிவின் கீழும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.