Caste Based Census TN Assembly Resolution: தமிழ்நாடு சட்டப்பேரவையில், சாதிவாரியான மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்திட ஒன்றிய அரசை வலியுறுத்தி முதலமைச்சர் ஸ்டாலினால் தனித் தீர்மானத்தை கொண்டுவந்தார். இத்தீர்மானத்தை முன்மொழிந்து  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் பேசுகையில்,"'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்ற உயர்ந்த கோட்பாட்டின் வழியில் 'எல்லோருக்கும் எல்லாம்' என்ற சமுதாய சிந்தனையை அடித்தளமாகக் கொண்டு, தனது சமூகநீதிப் பயணத்தை இந்த அரசு முன்னெடுத்து வருகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சமுதாயத்தின் அனைத்துத் தரப்பு மக்களும் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளை பெறுவதில் சம வாய்ப்புகளையும், சம உரிமைகளையும் கொண்டவர்களாக மாற்றுவதன் மூலம்தான் உண்மையான, பரவலான பொருளாதார வளர்ச்சி அடைந்த சமுதாயமாக நாம் மாற இயலும். அந்த நோக்கத்துடன்தான் கல்வி, சமூகம் மற்றும் பொருளாதாரம் ஆகிய தளங்களிலும் அனைத்துத்தரப்பு மக்களிடையேயும் சமநிலையைக் கொண்டுவருவதற்காக இடஒதுக்கீட்டு கொள்கை நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. 


இதனால் தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் என சமுதாயத்தின் அனைத்துத் தரப்பு மக்களும் ஒருங்கே வளர்ச்சியடைய வழிவகை செய்து, அதனைக் கடைபிடித்து வருகிறோம்.  சமீபகாலமாக, சாதிவாரிக் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற கோரிக்கை பரவலாகப் பேசப்பட்டு வருகின்றது. நேற்று முன்தினம்கூட, இந்தப் பேரவையிலே பாட்டாளி மக்கள் கட்சியின் உறுப்பினர் கோ.க.மணி பேசும்போது, சாதிவாரிக் கணக்கெடுப்பை மாநில அரசு மேற்கொள்ள வேண்டும் என்ற ஒரு கருத்தினைத் தெரிவித்திருந்தார்.



மேலும் படிக்க | சாதிவாரி கணக்கெடுப்பு : முதலமைச்சர் ஸ்டாலின் - பாமக ஜிகே மணி இடையே காரசார விவாதம்..!


சாதிவாரி கணக்கெடுப்பு... முழுமையான விவரம்...


சாதிவாரிக் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதுதான் திமுகவின் கருத்தும் என்பதை முதலில் இங்கு தெரிவித்துக் கொள்கிறேன். மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இப்பொருள் குறித்து இந்தப் பேரவைக்கு முழுமையான விவரங்களை எடுத்துரைப்பது சரியானதாக இருக்கும் என்று நான் கருதுகிறேன்.


தேசிய மக்கள் தொகைக் கணக்கெடுப்பு என்பது ஒன்றிய அரசால் மக்கள் தொகைக் கணக்கெடுப்புச் சட்டம், அதாவது, Census Act 1948-கீழ் மேற்கொள்ளப்படும் ஒரு மாபெரும் பணியாகும். இது ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இருந்து 100 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒன்றிய அரசால் நடத்தப்பட்டு வருகிறது. மக்கள்தொகை தொடர்பான புள்ளிவிவரங்கள் அனைத்தும் இக்கணக்கெடுப்பின் மூலம் சேகரிக்கப்பட்டு ஒன்றிய அரசால் தொகுத்து வெளியிடப்படுகிறது.


கணக்கெடுப்பை மாநில அரசு செய்யலாமா?


மக்கள் தொகைக் கணக்கெடுப்புச் சட்டத்தின் பிரிவு 3-ன்படி ஒன்றிய அரசுதான் மக்கள் தொகைக் கணக்கெடுப்பை நடத்தவேண்டும். ஆனால், பொதுவெளியில் பரவலாகத் தெரிவிக்கப்படும் ஒரு கருத்து என்னவென்றால், புள்ளிவிவரச் சட்டம் 2008, (Collection of Statistics Act, 2008) இன் அடிப்படையில் சாதிவாரிக் கணக்கெடுப்பை மாநில அரசு மேற்கொள்ளலாம் என்பதாகும்.


இந்தச் சட்டத்தின்படி மாநில அரசுகள் சமூகப் பொருளாதார புள்ளிவிவரங்களைச் சேகரிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளதே தவிர, இதே சட்டத்தின் பிரிவு 3 உட்பிரிவு (அ)-வின்படி இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 7-வது அட்டவணையிலுள்ள இனங்கள் தொடர்பாக புள்ளிவிவரங்கள் சேகரிக்க இயலாது. அந்த 7-வது அட்டவணையில்தான் மக்கள்தொகை கணக்கெடுப்பு 69வது இனமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. 


ஒன்றிய அரசே செய்ய வேண்டும்


அதுமட்டுமல்ல, இச்சட்டத்தின் பிரிவு 32-ன்படி மக்கள்தொகை சுணக்கெடுப்புச் சட்டம் 1948-இன்கீழ்
கணக்கெடுக்கப்படும் மக்கள்தொகை தொடர்பான புள்ளிவிவரங்களை (Census data) சேகரிக்க இயலாது என்று மிகவும் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், இப்பொருள் தொடர்பான வழக்கு தற்போது உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.


மேலும் படிக்க | 'ஆப்கானில் இருந்து தமிழ்நாடு வரும் ஹெராயின்...' ஆளுநர் ஆர்.என். ரவி பகீர் குற்றச்சாட்டு


இந்நிலையில், பொதுவெளியில் சிலர் தவறாகப் புரிந்து கொண்டுள்ளபடி 2008ஆம் ஆண்டு புள்ளிவிவரங்கள் சேகரிக்கும் சட்டத்தின்கீழ் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு மேற்கொள்ள இயலாது. சட்டப்படியாக நிலைக்கக்கூடிய கணக்கெடுப்பு என்றால், அது ஒன்றிய சட்டமான மக்கள் தொகை கணக்கெடுப்புச் சட்டத்தின்கீழ்தான் மேற்கொள்ளப்பட வேண்டும். எனவேதான், இப்பணியை ஒன்றிய அரசு மேற்கொள்வதுதான் முறையாக இருக்குமென்று நாங்கள் வலியுறுத்தி வருகிறோம்.


மக்கள்தொகை கணக்கெடுப்பு...


அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 246-ன்படி மக்கள்தொகை கணக்கெடுப்பு ஒன்றிய அரசின் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளது. 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை மேற்கொள்ள வேண்டிய அடிப்படையான பணியான மக்கள்தொகை சுணக்கெடுப்பினை 2021ஆம் ஆண்டு மேற்கொள்ளாமல் ஒன்றிய அரசு இன்றுவரை காலம் தாழ்த்தி வருவது எதனால்...?


முதல் ஆண்டு கொரோனா பெருந்தொற்றைக் காரணமாக சொன்னார்கள். தற்போது கொரோனா சென்று 3 ஆண்டுகளுக்கு மேலான பின்பும் அப்பணியை மேற்கொள்ளாமல் இருப்பது ஒன்றிய அரசு தன் கடமையைப் புறக்கணிக்கும் செயல் அல்லவா...? நாம் தொடர்ந்து கோரிக்கை வைப்பது மக்கள்தொகைக் கணக்கெடுப்பை மட்டுமல்ல, அத்துடன் சேர்த்து சாதிவாரிக் கணக்கெடுப்பையும் உடனடியாகத் தொடங்க வேண்டும் என்பதுதான். இதனை வலியுறுத்தி கடந்த 2023ஆம் தேதி அக்டோபர் 20ஆம் தேதி அன்று இந்திய பிரதமருக்கு நான் கடிதம் எழுதினேன்.


சட்ட ரீதியிலான பாதுகாப்பு


அவ்வாறு ஒன்றிய அரசு களப்பணியை மேற்கொள்ளும்போது கிடைக்கப்பெறும் புள்ளிவிவரங்களின் அடிப்படையில் மாநில அரசு எடுக்கும் முடிவுகளுக்கும், இயற்றும் சட்டங்களுக்கும் தான் சட்டரீதியான பாதுகாப்பு எப்போதும் இருக்கும். மாறாக, அந்தந்த மாநில அரசுகள் ஒரு சர்வே (Survey) என்ற பெயரில் புள்ளிவிவரங்களைச் சேகரிப்பது, பின்னர் அதன் அடிப்படையில் சட்டங்களை இயற்றுவது என்றால் அது பின்னொரு நாளில் நீதிமன்றங்களால் ரத்து செய்யப்படும் வாய்ப்புள்ளது. எனவேதான், இந்தக் காரணங்களின் அடிப்படையில் ஏற்கெனவே தாமதப்படுத்தப்பட்டுள்ள தேசிய மக்கள்தொகைக் கணக்கெடுப்பை ஒன்றிய அரசு உடனடியாகத் தொடங்க வேண்டுமென்றும், அத்துடன் சாதிவாரியான மக்கள்தொகைக் கணக்கெடுப்பையும் சேர்த்தே நடத்தவேண்டும் என்றும் இந்தப் பேரவை வாயிலாக இந்த தீர்மானத்தை நான் முன்மொழிய விரும்புகிறேன்" என்றார்.


தீர்மானம் நிறைவேற்றம்


மேலும், சட்டப்பேரவையில் அந்த தீர்மானத்தையும் முதலமைச்சர் ஸ்டாலின் வாசித்தார். அதில்,"இந்திய மக்கள் அனைவருக்கும் கல்வி, பொருளாதாரம், வேலைவாய்ப்பு ஆகிய அனைத்திலும் சம உரிமையும், சம வாய்ப்பும் கிடைப்பதை உறுதிசெய்யும் வகையில் திட்டங்களைத் தீட்டி, சட்டங்கள் இயற்ற வழிவகை செய்ய சாதிவாரியான மக்கள்தொகை கணக்கெடுப்பு அவசியம் என்று இப்பேரவை கருதுகிறது. எனவே 2021ஆம் ஆண்டு மேற்கொண்டிருக்க வேண்டிய மக்கள்தொகைக் கணக்கெடுப்பை உடனே தொடங்க வேண்டுமென்றும், அத்துடன் இம்முறை சாதிவாரியான கணக்கெடுப்பையும் இணைத்தே நடத்தவேண்டும் என்றும் ஒன்றிய அரசை இப்பேரவை ஒருமனதாக வலியுறுத்துகிறது. இந்தத் தீர்மானத்தை சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒருமனதாக நிறைவேற்றித் தரவேண்டுமென்று" என்றார்.


தனித்தீர்மானம் குறித்து பல்வேறு கட்சி சட்டப்பேரவை உறுப்பினர்களின் கருத்துக்கு பின்னர் 
தேசிய மக்கள்தொகைக் கணக்கெடுப்பை ஒன்றிய அரசு உடனடியாகத் தொடங்க வேண்டுமென்றும், அத்துடன் சாதிவாரியான மக்கள்தொகைக் கணக்கெடுப்பையும் சேர்த்தே நடத்தவேண்டும் என்ற தனித் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. குறிப்பாக இந்த தீர்மானம் தனித்தீர்மானம் மூலம் நிறைவேற்றப்பட்டது. 


அதிமுகவினருக்கு தடை


முன்னதாக, கள்ளக்குறிச்சி விவகாரம் குறித்து தங்களை பேச அனுமதிக்கவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அதிமுக உறுப்பினர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். இதை தொடர்ந்து, இந்த கூட்டத்தொடர் முழுவதும் அதிமுக உறுப்பினர்கள் பங்கேற்க சபாநாயகர் அப்பாவு தடை விதித்தார்.


மேலும் படிக்க | கள்ளக்குறிச்சி சம்பவத்தை முதல்வர் திசை திருப்புகிறார்-கார்த்தியாயினி குற்றச்சாட்டு!
 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ