காவிரி பாசன மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என பாமக நிறுவனர் இராமதாசு தெரிவித்துள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்., காவிரி பாசன மாவட்டங்களின் 9 பகுதிகளில் பாறை எரிவாயு எடுக்கும் திட்டத்தை கைவிடுவதாக  ஓ.என்.ஜி.சி. நிறுவனம் அறிவித்திருக்கிறது. தமிழகம் தவிர்த்த பிற மாநிலங்களிலும் பூமிக்கு அடியில் பாறைகளை பிளந்து மீத்தேன் உள்ளிட்ட எரிவாயுக்களை எடுப்பதற்கான ஓ.என்.ஜி.சி நிறுவனத்தின் முயற்சிகள் தோல்வியடைந்துள்ளன. இது தமிழக உழவர்கள் கொண்டாடப்பட வேண்டிய திருப்பம் ஆகும்.


தமிழ்நாட்டில் பாறை மீத்தேன் திட்டத்திற்கு எதிராக முதன்முதலில் குரல் கொடுத்த அரசியல் இயக்கம் பாட்டாளி மக்கள் கட்சி தான் என்ற முறையில் ஓ.என்.ஜி.சியின் இந்த முடிவு எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. இந்தியாவில் பூமிக்கு அடியில் பாறைகளுக்கு நடுவில் உருவாகியிருக்கும் மீத்தேன், ஈத்தேன் உள்ளிட்ட எரிவாயுக்களை எடுத்து வணிக அடிப்படையில் விற்பனை செய்ய திமுக & காங்கிரஸ் அங்கம் வகித்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு 2013-ஆம் ஆண்டில் முடிவு செய்தது. இதற்காக நாடு முழுவதும் 4 படுகைகளில் 190 பகுதிகளில் பாறை எரிவாயு திட்டங்களை செயல்படுத்த திமுக & காங்கிரஸ் கூட்டணி அரசு தீர்மானித்தது. தலா மூன்று ஆண்டுகள் கொண்ட 3 கட்டங்களாக, அதாவது 9 ஆண்டுகளில் இத்திட்டத்தை செயல்படுத்த தீர்மானிக்கப்பட்டது. ஓ.என்.ஜி.சி நிறுவனத்திற்கு 175 இடங்களிலும், ஆயில் இந்தியா நிறுவனத்திற்கு 5 இடங்களிலும் பாறை எரிவாயுக்களை எடுக்க உரிமங்கள் வழங்கப்பட்டன.


முதல் கட்டமாக 50 இடங்களில் இதற்கான ஆய்வுகளை 2014-15ஆம் ஆண்டுகளில் ஓ.என்.ஜி.சி  மேற்கொண்டது. காவிரி பாசன மாவட்டங்களில் மொத்தம் 9 இடங்களில் 35 கிணறுகளை அமைத்து பாறை எரிவாயுவை எடுக்க ஓ.என்.ஜி.சி நிறுவனம் மத்திய அரசுக்கு விண்ணப்பித்தது. அதை எதிர்த்து  நான் தான் 13.08.2015 அன்று முதன்முதலாக அறிக்கை விடுத்தேன். அதுமட்டுமின்றி கடலூர், அரியலூர் மாவட்டங்களில் பா.ம.க. சார்பில் போராட்டங்கள் நடத்தப்பட்டன. காவிரி பாசன மாவட்டங்களில் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் விழிப்புணர்வு பயணம் மேற்கொண்டார்; நாடாளுமன்றத்திலும் குரல் கொடுத்தார். பா.ம.கவைத் தொடர்ந்து பிற கட்சிகளும், உழவர் அமைப்புகளும் பல்வேறு போராட்டங்களை நடத்தின.


இதனால் காவிரி பாசன மாவட்டங்களில் ஓர் இடத்தில் கூட பாறை எரிவாயு எடுப்பதற்கான ஆய்வுப் பணிகளை மேற்கொள்ள முடியவில்லை. 2010-ஆம் ஆண்டில் உழவர்களின் நலனை காற்றில் பறக்கவிட்டு,  காவிரி பாசன மாவட்டங்களில் மீத்தேன் வாயு எடுப்பதற்கான ஆய்வுப் பணிகளை மேற்கொள்ள குஜராத்  மாநிலத்தைச் சேர்ந்த கிரேட் ஈஸ்ட்ரன் நிறுவனத்திற்கு அப்போதைய திமுக அரசு அனுமதி அளித்தது. அதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் அப்போதைய துணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கையெழுத்திட்டு  இருந்தார். அதற்கு எதிராக உழவர்களும், பொதுமக்களும் கிளர்ந்து எழுந்ததால், எவ்வாறு மீத்தேன் ஆய்வுப் பணிகள் தொடங்கப்படவில்லையோ, அதேபோல் தான் இப்போதும் தொடர் போராட்டங்கள் காரணமாக  காவிரி படுகையில் ஓ.என்.ஜி.சி நிறுவனத்தால் பாறை மீத்தேன் ஆய்வை மேற்கொள்ள முடியவில்லை.


மற்றொருபுறம் ஆந்திரப் பிரதேசம், குஜராத், அஸ்ஸாம் ஆகிய மாநிலங்களில் பரந்து விரிந்து கிடக்கும் 3 படுகைகளில் மொத்தம் 26 கிணறுகளை அமைத்து ஓ.என்.ஜி.சி நிறுவனம் ஆய்வு மேற்கொண்டது. ஆனால், அப்பகுதிகளில் வணிக அடிப்படையில் லாபம் கிடைக்கும் அளவுக்கு பாறை எரிவாயு கிடைக்காது என்று தெரியவந்ததையடுத்து காவிரி படுகை உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளிலும் பாறை எரிவாயு  எடுக்கும் திட்டத்தை கைவிடுவதாக மத்திய அரசுக்கு ஓ.என்.ஜி.சி நிறுவனம் கடிதம் எழுதியிருக்கிறது. இது பாட்டாளி மக்கள் கட்சிக்கும், தமிழக விவசாயிகள் அமைப்புகளுக்கும் கிடைத்த வெற்றி ஆகும்.


காவிரி படுகை உட்பட நாடு முழுவதும் பாறை எரிவாயு எடுக்கலாம் என்று ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு எடுத்த முடிவே புலியைப் பார்த்து பூனை சூடு போட்டுக் கொண்டதற்கு சமமான செயல் ஆகும். அமெரிக்காவில் பல ஆண்டுகளுக்கு முன் பெருமளவில் பாறை எரிவாயு வளம் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இந்தியாவிலும் 2000 லட்சம் கோடி கன அடி அளவுக்கு பாறை எரிவளி இருக்கலாம்; அவற்றில் 90 லட்சம் கோடி கன அடி பாறை எரிவளியை எடுக்க முடியும்; அதன் மூலம், அடுத்த 26 ஆண்டுகளுக்கு நமது எரிசக்தி தேவையை நிறைவேற்ற முடியும் என்று எண்ணி தான் இத்திட்டத்தை முந்தைய அரசு உருவாக்கியது. ஆனால், அதன் கணிப்புகள் அனைத்தும் இப்போது பொய்யாகி, தோல்வியடைந்துள்ளன.


இத்தோல்வியிலிருந்து ஓ.என்.ஜி.சி நிறுவனமும், பிற எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனங்களும் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும். ஓ.என்.ஜி.சி நிறுவனத்தின் பரிந்துரைப்படி பாறை எரிவாயு வளம் குறித்த புதிய மதிப்பீடு செய்யும் முயற்சியை கைவிட வேண்டும். பாறை எரிவாயு வளத்தைப் போன்றே, காவிரி படுகை உள்ளிட்ட பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் வளங்களும் போதிய அளவில் இல்லை என்று நிலவியல் வல்லுனர்கள் கூறியுள்ள நிலையில், மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ள ஹைட்ரோ கார்பன் திட்டங்களையும் முழுமையாக கைவிட வேண்டும். மாறாக, இந்தியாவின் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் காவிரி பாசன மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.