செப்.27 வரை 6000 கன அடி நீர் திறக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு
காவிரி விவகாரத்தில் தமிழக அரசின் இடைக்கால மனு மீது உச்ச நீதிமன்றம் இன்று டெல்லியில் விசாரணை நடத்தியது.
உச்ச நீதிமன்ற நீதிபதிகள், ''காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திருந்தால் காவிரி நீர் பிரச்சினையே வந்திருக்காது. காவிரி மேலாண்மை வாரியத்தை ஏன் அமைக்கவில்லை? காவிரி மேலாண்மை வாரியத்தை அமைப்பதே நிரந்தரத் தீர்வு. மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை 4 வாரத்துக்குள் அமைக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் முன்பு காவிரி விவகாரம் வழக்கு விசாரணைக்கு வந்தது.
''குடிநீர், பாசனத்துக்கே கர்நாடக அணைகள் தண்ணீர் இல்லை. தமிழகத்துக்கு தற்போது வரை 1.60 லட்சம் கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. தமிழகத்துக்கு மேலும் தண்ணீர் திறக்க அணைகளில் இருப்பு இல்லை'' என்று கர்நாடக அரசுத் தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.
இதை தமிழக அரசு எதிர்த்தது. தமிழகத்துக்கு தண்ணீர் திறக்காவிட்டால் விவசாயிகள் பாதிக்கப்படுவர் என்று தமிழக அரசு வாதம் செய்தது.
இந்த வாதத்தை கேட்ட நீதிபதிகள் வரும் செப்டம்பர் 21-ம் தேதி முதல் 27-ம் தேதி வரை 6000 கன அடி நீரை கர்நாடக அரசு தமிழகத்துக்கு திறந்துவிட வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர்.