காவிரி விவகாரம்: விவசாயிகள் முழு அடைப்பு போராட்டம்
சம்பா சாகுபடிக்கு காவிரியில் தண்ணீர் திறக்க வேண்டும் என டெல்டா மாவட்ட விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர். தண்ணீர் திறக்க கர்நாடக அரசு மறுத்து வருகிறது. காவிரியில் தண்ணீர் திறக்க உத்தரவிட வலியுறுத்தி சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கு விசாரணைக்கு வர உள்ளது.
இந்நிலையில், காவிரியில் தண்ணீர் திறக்க வலியுறுத்தி ரயில் மறியல் மற்றும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட போவதாக விவசாய சங்கங்கள் அறிவித்தன. இதற்கு அனைத்து கட்சிகளிடமும் விவசாய சங்கங்கள் ஆதரவு கேட்டன. கட்சிகள் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தன. இதன்படி இன்று தமிழகம் முழுவதும் விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.
சென்னை, தஞ்சாவூர், திருச்சி, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, கடலூர், கோவை, நாமக்கல் மற்றும் இன்னும் பல மாவட்டங்களில் விவசாய சங்கத்தினரும் அரசியல் கட்சிகளும் போராட்டம் நடத்தினர். சென்னையில் எழும்பூர் ரயில் நிலையத்தின் ஒரு நுழைவு வாயில் அடைக்கப்பட்டது. தொடர்ந்து ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற விவசாயிகளை போலீசார் கைது செய்தனர். விவசாய சங்க தலைவர் பி.ஆர்.பாண்டியன் கைது செய்யப்பட்டார்.
தஞ்சாவூர் ரயில் நிலையத்தில் வாஸ்கோடாகாமா ரயிலை 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் ரயிலை மறித்தனர். அங்கு போலீசார் மற்றும் விவசாயிகள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. ஒரத்தநாடு பகுதியில் முழு கடையடைப்பு போராட்டம் நடந்து வருகிறது. தஞ்சாவூரில் 100க்கும் மேற்பட்ட இடங்களில் போராட்டம் நடந்து வருகிறது.
திருச்சியில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கம் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடக்கிறது. நாகை ரயில் மறியல் போராட்டம் மற்றும் சாலை மறியல் போராட்டம் நடக்கிறது. போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர். சூலூர் கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கம் சார்பில் சிறுவாணி ஆற்றி் குறுக்கே அணை கட்டுவதை கண்டித்து சோமனூர் ரயில் நிலையத்தக்கு ரயிலை மறிக்க விவசாயிகள் சென்றனர். வழியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது அவர்களை போலீசார் கைது செய்தனர்.