காவேரி விவகாரம்: கர்நாடக வாகனம், ஓட்டல் மீது தாக்குதல்
சம்பா சாகுபடிக்கு 10 நாட்களில் 50 டிஎம்சி தண்ணீர் திறந்துவிட கர்நாடக அரசுக்கு உத்தரவிடுமாறு, கடந்த மாதம் ஆகஸ்ட் 22-ம் தேதி தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தது. அது தொடர்பான ஆவணங்களை செப்டம்பர் 2-ம் தேதி நடைபெற்ற விசாரணையின் போது கர்நாடக அரசு சுப்ரீம் கோர்ட்டில் அளித்தது. அந்த ஆவணங்களில் ஏராளமான குளறுபடிகள் இருப்பதாக கூறப்பட்ட நிலையில், கர்நாடகாவுக்கு எதிராக பதில்மனு தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்தது. அதனை தொடர்ந்து தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்தது.
அந்த மனு மீதான உத்தரவில் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க கர்நாடாகாவுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது. 15 ஆயிரம் கன அடி தண்ணீர் வீதம் 10 நாட்களுக்கு திறந்து விட வேண்டும் என நீதிபதிகள் கூறியுள்ளனர். இது தொடர்பாக தமிழக அரசு கண்காணிப்பு குழுவவை 3 நாட்களில் அணுகவும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறந்து விடப்பட்டதை கண்டித்தும், தமிழக அரசுக்கும் எதிர்ப்பு தெரிவித்தும் கர்நாடகாவில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. போராட்டத்துக்கு ஆதரவாக மாநிலம் முழுவதும் தமிழக சேனல்கள் ஒளிபரப்பை கேபிள் டிவி சங்கங்கள் நிறுத்தி வைத்தன.
மாண்டியா, மைசூர் மாவட்டங்களில் 5 நாட்கள் தொடர் போராட்டம் நடந்தது. இதற்கிடையே தமிழக பதிவு எண் கொண்ட வாகனங்கள் மீது தாக்குதல் நடத்தி வரும் கன்னட அமைப்பினர், தமிழ் இளைஞர் ஒருவரை சரமாரியாக தாக்கினர். இந்த தாக்குதல் காட்சிகள் இணைய தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
இதன் காரணமாக தமிழகத்திலும் கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கு எதிராக போராட்டங்கள் நடக்கத் தொடங்கி உள்ளன. சென்னையில் கர்நாடக மாநிலத்தவர்களுக்கு சொந்த மான நட்சத்திர ஓட்டலில் தாக்குதல் நடத்தப்பட்டது.
மயிலாப்பூரில் உள்ள நியூ உட்லண்ட்ஸ் ஓட்டலுக்கு இன்று அதிகாலை நுழைந்த கும்பல் கைகளில் இருந்த இரும்பு கம்பிகளால் வரவேற்பறையில் இருந்த பொருட்கள் மற்றும் கண்ணாடிகளையும் அடித்து உடைத்துள்ளனர். பிறகு அடுத்தடுத்து பெட்ரோல் குண்டுகள் வீசி தாக்குதல் நடத்தினர். மேலும் கர்நாடகத்தில் தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தப் பட்டால் இங்கு வாழும் கன்னடர்கள் மீது தாக்குதல் தொடரும் என்ற எச்சரிக்கை கடிதத்தையும் துண்டு பிரசுரங்களை அந்த கும்பல் வீசிச் சென்றனர்.
இச்சம்பவத்தில் ஈடுபட்ட வர்கள் யார்? என்று தெரியவில்லை. தமிழ் ஆதரவு அமைப்பினர் இத்தாக்குதலில் ஈடுபட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. இது தொடர்பாக ராயப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன்னர்.
கர்நாடக பதிவெண் கொண்ட வாகனங்கள் மீது தமிழ் அமைப்புக்களைச் சேர்ந்த சிலர் தாக்குதல் நடத்தி உள்ளனர். இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக 4 பேரை ராமேஸ்வரம் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றன்னர்.