காவிரி: கர்நாடக அரசுக்கு உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை
காவிரி விவகாரத்தில் உத்தரவை பின்பற்றாத கர்நாடகாவிற்கு சுப்ரீம் கோர்ட்டு இறுதி எச்சரிக்கை விடுத்து உள்ளது. அக்டோபர் 4-ம் தேதிக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்குமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
காவிரி விவகாரத்தில் மத்திய அரசு இருமாநில முதல்வர்களையும் அழைத்து பேசவேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. அதன்படி நேற்று டெல்லியில் இரு மாநில அரசுகளையும் அழைத்து மத்திய மந்திரி உமாபாரதி பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் ஏற்படவில்லை.
உமா பாரதி தலைமையில் இரு மாநில அரசுகளுக்கு இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தை விவரங்களை சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தாக்கல் செய்தது.
இன்று வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது:- காவிரியில் இருந்து தமிழகத்துக்கு நாளை முதல் 6-ம் தேதி வரை வினாடிக்கு 6,000 கன அடி தண்ணீர் திறந்துவிட வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது. மேலும் மத்திய அரசு 3 நாட்களுக்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கவேண்டும் என்று உத்தரவிட்டது.
உச்ச நீதிமன்ற உத்தரவை கர்நாடகா அரசு தொடர்ந்து அவமதித்து வருகிறது. இது கர்நாடக அரசுக்கு கடைசி எச்சரிக்கை என காவிரி விவகாரத்தில் கர்நாடகாவின் செயல்பாட்டிற்கு சுப்ரீம் கோர்ட்டு கடும் கண்டனம் தெரிவித்தது.
வழக்கு விசாரணை அக்டோபர் 6-ம் தேதிக்கு ஒத்தி வைத்தது. மேலும் 6-ம் தேதியன்று நீதிமன்றத்தில் ஆய்வறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டும் என உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.