உச்ச நீதிமன்ற உத்தரவின்படி தமிழகத்துக்கு காவிரி நீரைத் திறந்துவிட முடியாது என கர்நாடக முதல்வர் சித்தராமையா அறிவித்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உச்ச நீதிமன்றம் 21-ம் தேதி முதல் வரும் 27-ம் தேதி வரை தமிழகத்துக்கு நொடிக்கு 6 ஆயிரம் கன அடி காவிரி நீரைக் கர்நாடகா திறக்க வேண்டும். 4 வாரத்துக்குள் மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என நேற்று முன்தினம் உத்தரவிட்டது. இதற்கு கர்நாடகாவில் உள்ள அரசியல் கட்சிகளும், கன்னட அமைப்பினரும், விவசாய சங்கங்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.


இந்நிலையில் உச்ச நீதிமன்ற தீர்ப்பு குறித்து விவாதிப்பதற்காக கர்நாடக முதல்வர் சித்தராமையா அவசரமாக நேற்று அமைச்சரவை கூட்டத்தை கூட்டினார். பெங்களூருவில் உள்ள கர்நாடக அரசின் தலைமை செயலகத்தில் இக்கூட்டம் நடைபெற்றது. காவிரி விவகாரம் தொடர்பாக விவாதிப்பதற்காக‌ அவசர அனைத்துக்கட்சி கூட்டத்தை பாஜக புறக்கணித்தது. 


இதையடுத்து கர்நாடக முதல்வர் சித்தராமையா முன்னாள் பிரதமரும் மஜத தலைவருமான தேவகவுடாவை பெங்களூருவில் உள்ள அவரது இல்லத்தில் சென்று சந்தித்தார். 


பிறகு சித்தராமையா செய்தியாளர்களிடம் கூறியதாவது:- உச்ச நீதிமன்ற உத்தரவை மதித்து தமிழகத்துக்கு காவிரி நீரை விட முடியாது. கர்நாடக அணைகளில் போதிய நீர் இருப்பு இல்லாததால் குடிநீருக்கே கடும் த‌ட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த சூழலில், தமிழகத்துக்கு சம்பா பாசனத்துக்காக ஒரு சொட்டு நீரைக் கூட வழங்க முடியாது. காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கும் முடிவையும் ஏற்க முடியாது. இது தொடர்பாக சட்டரீதியான போராட்டம் நடத்தப்படும்'' என்றார்.


இதனால் கிருஷ்ணராஜசாகர், கபினி அணைகளில் இருந்து தமிழகத்துக்கு திறக்கப்பட்ட காவிரி நீர் முழுவதுமாக நிறுத்தப்பட்டது.