நவம்பர் 23ம் தேதி கஜா புயல் சேதாரங்களை பார்வையிட மத்திய குழு தமிழகம் வருகை
கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட மத்திய குழு நவம்பர் 23 ஆம் தேதி தமிழகம் வருகை தருகிறது.
இன்று மாலை மீண்டும் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கஜா புயல் பாதிப்புகளை பார்வையிட மத்திய குழுவினர் நாளை தமிழகம் வருகின்றனர். அவர்களுடன் சேர்ந்து ஆலோசனை செய்து பின்னர் எந்ததெந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டும் என முடிவு செய்யப்படும் எனக் கூறினார்.
இதனையடுத்து, நவம்பர் 23 ஆம் தேதி(நாளை) மத்திய குழுவினர், தமிழகத்தில் கஜா புயலால் எந்ததெந்த பகுதிகளில் பெருமளவு பாதிப்புக்கள் ஏற்ப்பட்டு உள்ளது என்றும், பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடவும், எவ்வளவு நிவாரண பணிகள் செய்யப்பட்டு உள்ளது என்பதை கண்காணித்து மத்திய அரசு அறிக்கை அனுப்பி வைக்கும். அதன் பின்னர், இந்த அறிக்கையின் அடிப்படையில், தமிழகத்திற்கு நிவாரண நிதி எவ்வளவு அளிக்க வேண்டும் என்றும் மத்திய அரசு முடிவு செய்யும்.
முன்னதாக, இன்று காலை 9.45 மணியளவில் பிரதமர் மோடியை சந்தித்துப் பேசி, கஜா புயலால் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள சேதங்களை அவர் விரிவாக எடுத்துரைத்தார் தமிழக முதல் அமைச்சர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கஜா புயல் பாதிப்பால், தமிழகத்திற்கு நிவாரண நிதியாக 15 ஆயிரம் கோடி ரூபாய் வழங்க வேண்டும் என்றும், அதில் 1500 கோடி ரூபாயை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும் பிரதமரிடம் வலியுறுத்தினேன். மேலும் புயல் சேதங்களை மதிப்பிட்டு ஆய்வு செய்வதற்காக மத்திய குழுவை விரைந்து தமிழகம் அனுப்ப வேண்டும் என்று பிரதமர் மோடியிடம் வலியுறுத்தி உள்ளேன் எனக் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.