ஹைட்ரோ கார்பன் விவகாரம்: இரட்டை வேடம் போடும் மத்திய அரசு- ஸ்டாலின்
ஹைட்ரோ கார்பன் விவகாரத்தில் மத்திய அரசு இரட்டை வேடம் போடுகிறது என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:-
தமிழக சட்டசபையின் நிதிநிலை அறிக்கை விவாதத்தின் போது, ஜல்லிக்கட்டு போராட்டத்துக்கு எப்படி தமிழக சட்டசபையில் ஒருமனதாக தீர்மானத்தை நிறைவேற்றினோமோ, அதேபோல் இந்த பிரச்னைக்கும் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று திமுக சார்பில் நான் கோரிக்கை விடுத்தேன்.
அதற்கு பதிலளித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அமைச்சர் கூறியது, தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் எரிவாயு எடுப்பதற்கு ஒருபோதும் அனுமதி கொடுக்க மாட்டோம். மத்திய அரசு, இந்த திட்டத்தை கொண்டு வந்தால், அதை மாநில அரசு ஏற்று கொள்ளாது என்று கூறினார்கள்.
ஆனால் மத்திய அரசு, ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கான ஒப்பந்தம் நிறுவனங்களுடன் கையெழுத்து போட்டுள்ளது.
இந்த விவகாரத்தில் மத்திய அரசு, தமிழக மக்களை ஏமாற்றி கொண்டு இரட்டை வேடம் போடுகிறது. அதற்கு இங்குள்ள மாநில அரசு மவுனமாக இருந்து துணைபோகிறது என கூறினார்.