உயிரைக் குடிக்கும் சாலை போக்குவரத்து கொள்கையில் மாற்றங்கள் செய்ய வேண்டும் என பாமக நிறுவனர் இராமதாசு தெரிவித்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்., "இந்தியாவில் சாலை விபத்துகளில் உயிரிழப்பவர்கள் தொடர்பாக நடத்தப்பட்ட ஆய்வுகளில் தெரிய வந்துள்ள உண்மைகள் மிகவும் அதிர்ச்சியளிப்பவையாக உள்ளன. மகிழுந்துகள் மற்றும் பேருந்துகளில்  செல்வோரின் பாதுகாப்பில் காட்டும் அக்கறையை மிதிவண்டிகள் மற்றும் இரு சக்கர ஊர்திகளில் செல்வோரின் பாதுகாப்பில் மத்திய அரசு காட்டுவதில்லை என்று ஓர் ஆய்வில் தெரியவந்திருக்கிறது.


இந்தியாவில் சாலை விபத்துகளில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை குறித்து மத்திய நெடுஞ்சாலைப் போக்குவரத்துத் துறை ஒவ்வொரு ஆண்டும் புள்ளிவிவரங்களை வெளியிட்டு வருகிறது. மத்திய அரசின் அதிகாரப்பூர்வ புள்ளிவிவரமான அதில் இடம்பெற்றுள்ள தகவல்கள் தான் உண்மை என்று அனைவரும் நம்பிக் கொண்டிருக்கின்றனர். ஆனால், அதில் குறிப்பிடப்பட்ட எண்ணிக்கையை விட 50%க்கும் கூடுதலான மக்கள் விபத்துகளில் இறக்கின்றனர் என்பது தான் ஆய்வுகளில் தெரியவந்துள்ள உண்மையாகும்.


மத்திய சுகாதார அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் குழுவின் சார்பில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வின் முடிவுகள் மருத்துவ உலகின் தலைசிறந்த ஆய்வு இதழாக போற்றப் படும் லான்செட் இதழில் வெளியிடப்பட்டுள்ளன. மருத்துவமனைகளில் நடத்தப்படும் உடல்கூறு ஆய்வுகளில் தெரியவரும் இறப்புக்கான காரணங்களின் அடிப்படையில், 2017&ஆம் ஆண்டில்  நெடுஞ்சாலைகளில் நிகழ்ந்த விபத்துகளில் மட்டும் 2 லட்சத்து 18,876 பேர் உயிரிழந்துள்ளனர். இது அதே ஆண்டில் மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக தெரிவித்த எண்ணிக்கையான ஒரு லட்சத்து 47,913&ஐ விட 70,963 அதிகமாகும்.


நெடுஞ்சாலை விபத்துகளில் உயிரிழந்தவர்களில் 2 லட்சத்து 17,379 பேர் இரு சக்கர ஊர்திகளிலும், மோட்டார் வாகனங்களிலும்,  நடந்தும் பயணித்தவர்கள் ஆவர். உயிரிழந்தவர்களில் 76,729 பேர் (35.1%) பாதசாரிகள் ஆவர். 67,524 பேர், அதாவது 30.90 விழுக்காட்டினர் இரு சக்கர வாகனங்களிலும், 57,802 பேர்(26.40%) மோட்டார் வாகனங்களிலும் பயணம் செய்தவர்கள். மிதிவண்டிகளில் சென்றவர்களில் 15,324 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த உயிரிழப்புகள் நியாயப்படுத்த முடியாத அளவுக்கு அதிகம் ஆகும்.


உலக அளவில் சாலை விபத்துகளில் உயிரிழப்போரின் விகிதம் 1990-ஆம் ஆண்டிலிருந்து 2017-ஆம் ஆண்டு வரையிலான 27 ஆண்டுகளில் 8.10% மட்டுமே அதிகரித்துள்ள நிலையில், இந்தியாவில் மட்டும் இந்த விகிதம் 58.70% அதிகரித்துள்ளது. இதற்குக் காரணம் தவறான போக்குவரத்து கொள்கை தான்.


இந்தியாவில் புதிய பொருளாதாரக் கொள்கை அறிமுகம் செய்யப்பட்ட பிறகு வாகனப் புரட்சி நடைபெற்று வருகிறது. அதற்கு முன் ஓரிரு நிறுவனங்கள் மட்டுமே வாகனத் தயாரிப்பில் ஈடுபட்டு வந்த நிலையில், இன்று உலகின் அனைத்து நிறுவனங்களின் மகிழுந்துகள் உள்ளிட்ட வாகனங்களும் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படுகின்றன. அதனால், சாலைகளில் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்த அளவுக்கு சாலைப்பாதுகாப்பின் அளவும், கட்டமைப்பு வசதிகளும் மேம்படுத்தப்படவில்லை. இதனால் தான் இந்தியாவில் சாலைவிபத்தில் உயிரிழப்போரின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது.


இந்தியாவின் போக்குவரத்துக் கொள்கையும், அணுகுமுறையும் மகிழுந்துகள் உள்ளிட்ட வாகனங்களை மனதில் கொண்டே உருவாக்கப்படுகின்றன. வாகனங்கள் அதிக எண்ணிக்கையில் தயாரிக்கப்பட்டு, விற்பனை செய்யப்பட்டால் நாட்டின் பொருளாதாரம்  அதிகரிக்கும் என்ற நம்பிக்கை தான் இதற்கு காரணம் ஆகும். இந்த தவறான நம்பிக்கைக் காரணமாக சாலைகளில் மகிழுந்துகள் உள்ளிட்ட வாகனங்களின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்கும் அரசுகள், மகிழுந்து வாங்க முடியாமல் இரு சக்கர ஊர்திகளிலும், மிதிவண்டிகளிலும் பயணிப்போரின் பாதுகாப்பில் அக்கறை செலுத்துவது இல்லை.


வாகனங்களுக்கு ஆதரவான கொள்கையால் சாலை விபத்துகளும், உயிரிழப்புகளும் ஏற்படுவது மட்டுமின்றி, சுற்றுச்சூழலுக்கும், பொருளாதாரத்திற்கும் கூட பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்படுகின்றன. உலகில் வளர்ச்சியடைந்த நாடுகள் எதுவும் வாகனங்களுக்கு முக்கியத்துவம் அளிப்பதில்லை. பொதுப் போக்குவரத்துக்கு தான் வளர்ந்த நாடுகள் முக்கியத்துவம் அளிக்கின்றன. இந்தியாவில் மட்டும் தான்  பொருளாதார வலிமை மிக்க வாகன தயாரிப்பு நிறுவனங்கள் லாபி, தங்களின் செல்வாக்கைப் பயன்படுத்தி  நெடுஞ்சாலைப் போக்குவரத்துக் கொள்கை மற்றும் அணுகுமுறையில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. இதே அணுகுமுறை நீடித்தால் இன்னும் பல பத்தாண்டுகள் ஆனாலும்  விபத்து உயிரிழப்புகள் குறையாது.


இந்த நிலையை மாற்றி இந்தியாவை சாலைவிபத்துகளில் உயிரிழப்புகள் குறைந்த நாடாக மாற்ற வேண்டும். இதற்காக சாலைகளில் இரு சக்கர ஊர்திகள், மிதிவண்டிகள் ஆகியவற்றுக்கு தனித்தனி தடங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும்; நடைபாதை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட வேண்டும். அதிவிரைவுப் பேருந்து பாதைகள் (Chennai Bus Rapid Transit System - BRTS ) அமைக்கப்படுவதுடன், பொதுப்போக்குவரத்து வலுப்படுத்தப்பட வேண்டும். இவற்றுக்கெல்லாம் மேலாக நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகள் நிரந்தரமாக மூடப்பட வேண்டும்." என குறிப்பிட்டுள்ளார்.