சசிகலாவை அதிமுகவில் இருந்து நீக்கியது செல்லும் என நீதிமன்றம் தீர்ப்பு...மேல்முறையீடு செய்யும் சசிகலா
அதிமுக பொதுச்செயலாளர் பதவியிலிருந்து தன்னை நீக்கிய பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்து சசிகலா தொடர்ந்த வழக்கை நிராகரித்து சென்னை உரிமையியல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்த தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யவுள்ளதாக சசிகலா அறிவித்துள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளராக இருந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவிற்கு பிறகு, கட்சியின் பொதுச்செயலாளராக வி.கே.சசிகலாவும், துணைப் பொதுச்செயலாளராக டிடிவி தினகரனும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக அதிமுக தரப்பில் அறிவிக்கப்பட்டது. சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா சிறை சென்ற பிறகு, 2017-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்ற அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில், சசிகலா, தினகரன் ஆகியோரை பதவிகளில் இருந்து நீக்கம் செய்தும், கட்சியில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை உருவாக்கியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பொதுச்செயலாளர் இல்லாமல் கூட்டப்பட்ட பொதுக்குழு செல்லாது என அறிவிக்கக் கோரியும், அந்த பொதுக்குழுவில் தங்களை நீக்கிய தீர்மானத்தை ரத்து செய்யக் கோரியும் சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோர் சென்னை மாவட்ட கூடுதல் உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். தன்னை பொதுச்செயலாளராக அறிவித்து 2016 டிசம்பர் 29-ம் தேதி நிறைவேற்றப்பட்ட தீர்மானம் கட்சி உறுப்பினர்கள் என்ற முறையில் ஓ. பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி ஆகியோரையும் கட்டுப்படுத்தும் எனவும், கட்சியில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை உருவாக்கியது சட்டவிரோதம் என அறிவிக்க வேண்டுமெனவும் சசிகலா தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
மேலும் படிக்க | அதிமுகவை உரிமை கோர சசிகலாவிற்கு எந்த அடிப்படை முகாந்திரமும் இல்லை: ஓபிஸ் தரப்பு
அ.ம.மு.க என்ற பெயரில் தனிக்கட்சி தொடங்கியதால், டிடிவி தினகரன் இந்த வழக்கில் இருந்து விலகினார். சசிகலாவின் வழக்கை நிராகரிக்கக்கோரி அதிமுக நிர்வாகிகள் தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. சசிகலாவை கட்சியிலிருந்து நீக்கியதை டெல்லி உயர்நீதிமன்றமும், தேர்தல் ஆணையமும் ஏற்றுக் கொண்ட நிலையில், தன்னை அதிமுக பொதுச்செயலாளர் என சசிகலா தவறான தகவல்களை நீதிமன்றத்தில் தெரிவிப்பதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.
சசிகலா தரப்பில், உச்ச நீதிமன்ற உத்தரவின்படி கட்சியின் பெயர், சின்னம் தொடர்பாக மட்டுமே தேர்தல் ஆணையம் முடிவெடுத்துள்ளதாகவும், கட்சியின் மற்ற விவகாரங்களில் தலையிட முடியாது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளதாகவும் வாதிடப்பட்டது. தனது வழக்கை நிராகரிக்கக் கோரி அதிமுக நிர்வாகிகள் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் சசிகலா தரப்பில் வாதிடப்பட்டது.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட சென்னை 4-வது கூடுதல் உரிமையியல் நீதிமன்ற நீதிபதி ஜெ.ஸ்ரீதேவி, அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி தாக்கல் செய்த மனுவை ஏற்று, சசிகலாவின் வழக்கை நிராகரித்து உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து, சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த சசிகலா, சென்னை உரிமையியல் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யவுள்ளதாகத் தெரிவித்தார்.
மேலும் படிக்க | அ.ம.மு.க ஆரம்பிக்கப்பட்டது அ.தி.மு.க-வை மீட்டெடுக்கவே – டிடிவி. தினகரன்
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR