சென்னை தினம் ஒரு பார்வை
சென்னை தினம் என்பது தமிழ்நாட்டின் தலைநகரமாகிய சென்னை தோற்றுவிக்கப்பட்டதாகக் கருதப்படுகிறது. இந்நாள் 2004-ம் ஆண்டில் இருந்து நினைவு கூரப்பட்டு வருகிறது.
1639-ம் ஆண்டு கிழக்கிந்திய கம்பெனியைச் சேர்ந்த பிரான் கிஸ்டே, ஆன்ட்ரூ கோகன் ஆகியோர் தங்களின் உதவியாளரான பெரிதிம்மப்பாவின் உதவியுடன், செயின்ட் ஜார்ஜ் கோட்டை உள்ள இடத்தை சென்னப்ப நாயக்கன் என்பவரின் மகன்களான அய்யப்பன், வேங்கடப்பன் ஆகியோரிடமிருந்து விலைக்கு வாங்கினர்.
அந்த இடத்தில் கோட்டையை கட்டி கோட்டைக்கு வடக்கு பகுதியில் உள்ள ஊருக்கு, இடத்தை விற்பனை செய்தவர்களின் தந்தையின் பெயரை கொண்டு, சென்னப்பட்டினம் என்று அழைத்தனர்.
உலகளவில் இன்று மிகவும் பிரபலம் ஆகியுள்ள சென்னை ஆரம்பத்தில் மதராஸ் என அழைக்கப்பட்டது.
பத்திரிக்கையாளர்களான சசி நாயர், மயிலாப்பூர் டைம்ஸின் ஆசிரியரான வின்சண்ட் டி சொஸா, மெட்ராஸ் மியூசிங்ஸின் ஆசிரியரான முத்தையா ஆகிய மூவரும் இணைந்து உருவாக்கியதே இந்த சென்னை தினம்.முதன் முதலில் ஒரு சில கருப்பு வெள்ளைப் படங்களுடன் 2004-ம் ஆண்டு தொடங்கிய இந்தக் கொண்டாட்டம் இன்று வளர்ச்சியடைந்து புகைப்படக் கண்காட்சி, உணவுத் திருவிழா, மாரத்தான் ஓட்டம் என பல பரிமாணங்களில் கொண்டாடப்பட்டு வருகிறது.