ஓய்வுபெறும் சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு ஐ.ஜி பொன் மாணிக்கவேலை ஒரு வருடத்திற்கு சிறப்பு அதிகாரியாக நியமிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு! 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழகத்தில் சிலை கடத்தல் தொடர்பான வழக்குகளை, உயர்நீதிமன்ற உத்தரவுப்படி ஐ.ஜி.பொன்.மணிக்கவேல் விசாரித்து வந்தார். இந்த நிலையில், சிலை கடத்தல் வழக்குகளை சிபிஐக்கு மாற்றி, தமிழக அரசு உத்தரவிட்டது. இதனை எதிர்த்து, வழக்கறிஞர் யானை ராஜேந்திரன், டிராபிக் ராமசாமி உள்ளிட்டோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அதில், அரசியல்வாதிகள், உயர் அதிகாரிகளை காப்பாற்றுவதற்காக, அரசாணை வெளியிடப்பட்டதாக குற்றம்சாட்டினர். 


இந்த நிலையில், நீதிமன்றத்தில் சாட்சி விசாரணை தொடங்கிய வழக்குகளைத் தவிர, நிலுவையில் உள்ள மற்ற அனைத்த வழக்குகளையும், சிபிஐ விசாரணைக்கு மாற்றி, கடந்த ஆகஸ்ட் ஒன்றாம் தேதி, தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டது. இந்த அரசாணையை எதிர்த்து, வழக்கறிஞர் யானை ராஜேந்திரன், டிராபிக் ராமசாமி ஆகியோர், உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.


இந்த வழக்கை, சிலைக்கடத்தல் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும், உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய சிறப்பு அமர்வில், கடந்த ஆகஸ்ட் மாதம் 7 ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, சிலைக்கடத்தல் வழக்குகளை சிபிஐக்கு மாற்றி தமிழ்நாடு அரசு பிறப்பித்த அரசாணைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர். 


இதனைத்தொடர்ந்து, இந்த வழக்கு இறுதி விசாரணைக்கு வந்தபோது, தங்களிடம் ஆட்கள் பற்றாக்குறை இருப்பதால், சிலை கடத்தல் வழக்குகளை தங்களால் விசாரிக்க முடியாது என்றும், தற்போது, விசாரித்து ஐ.ஜி பொன்.மாணிக்கவேல் குழுவுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கத் தயாராக இருப்பதாக சிபிஐ திட்டவட்டமாக தெரிவித்தது.


இதனைத் தொடர்ந்து, ஐ.ஜி பொன்.மணிக்கவேலின் பதவிக்காலத்தை மேலும் ஓர் ஆண்டுகாலம் நீட்டிப்பதாகவும், அவருக்கு தற்போது, தமிழ்நாடு அரசு அளித்த அனைத்து வசதிகளையும், தொடர்ந்து வழங்க வேண்டும் என்றும் தீர்ப்பளித்தனர். அதற்கான உரிய உத்தரவை டிஜிபியும், தமிழ்நாடு அரசும் பிறப்பிக்க வேண்டும் என்றும், மத்திய அரசும், சிபிஐயும் தெரிவித்துள்ளதுபோல், சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.