டாஸ்மாக் பார்களை மூடும் உத்தரவுக்கு இடைக்காலத் தடை
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளை ஒட்டி அமைந்துள்ள பார்களை ஆறு மாதங்களுக்குள் மூட வேண்டும் என்ற தனி நீதிபதியின் உத்தரவிற்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
தமிழகம் முழுவதும், டாஸ்மாக் சில்லறை மதுபானக் கடைகளின் அருகில் உள்ள பார்களில், தின்பண்டங்கள் விற்பனை மற்றும் காலி பாட்டில்களை சேகரிப்பதற்கு புது டெண்டர் அறிவிப்பை டாஸ்மாக் நிறுவனம் வெளியிட்டது. கொரோனா ஊரடங்கால் பார்கள் மூடப்பட்டுள்ளதால் புதிய டெண்டருக்கு பதிலாக பழைய டெண்டரையே நீட்டிக்க வேண்டும், நில உரிமையாளர்களின் தடையில்லா சான்றை கட்டாயப்படுத்தக் கூடாது போன்ற கோரிக்கைகளுடன் வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி சி.சரவணன், அனைத்து வழக்குகளையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
அதேசமயம், தமிழ்நாடு மதுவிலக்கு சட்டப்பட, பார் நடத்த டாஸ்மாக்குக்கு அதிகாரம் இல்லாததால் தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளை ஒட்டி அமைக்கப்பட்டுள்ள பார்களை ஆறு மாதங்களுக்குள் மூட வேண்டும் என்றும் கடந்த ஜனவரி 31-ம் தேதி உத்தரவிட்டிருந்தார். 1937 தமிழ்நாடு மதுவிலக்கு சட்டத்தின் கீழ் டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களை மொத்தமாகவும், சில்லறையாகவும் விற்பதற்கு மட்டுமே அனுமதி உண்டு என்றும் தெரிவித்தார். தனி நீதிபதியின் இந்த உத்தரவை எதிர்த்து டாஸ்மாக் நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தது.
இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி, நீதிபதி பரத சக்ரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது தமிழக அரசு தரப்பில் தலைமை வழக்கறிஞர் ஆர். சண்முகசுந்தரம் ஆஜரானார். சில்லறை விற்பனை விதிகளின் படி, டாஸ்மாக் கடைகளின் அருகில் பார்களுக்கு உரிமம் வழங்க டாஸ்மாக் நிறுவனத்துக்கு அதிகாரம் உள்ளதாகவும், பார்கள் நடத்த டாஸ்மாக் நிறுவனத்துக்கு அதிகாரமில்லை என தனி நீதிபதி மேற்கோள்காட்டிய மதுவிலக்கு சட்டப்பிரிவு, பார் உரிமம் வழங்கும் விஷயத்துக்கு பொருந்தாது எனவும் குறிப்பிட்டார்.
டாஸ்மாக் பார் டெண்டரை எதிர்த்து தான் வழக்கு தொடரப்பட்டதாகவும், டாஸ்மாக் கடைகள் அருகில் பார் அமைக்க கூடாது என எந்த வாதங்களும் முன் வைக்கப்படாத நிலையில், தனி நீதிபதி, பார்களை மூட வேண்டும் என பிறப்பித்த உத்தரவு தேவையற்றது எனவும் சுட்டிக்காட்டினார். இதையடுத்து டாஸ்மாக் கடைகளை ஒட்டி அமைந்துள்ள பார்களை ஆறு மாதங்களுக்குள் மூட வேண்டும் என்ற தனி நீதிபதியின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டது. மேலும், மேல்முறையீட்டு மனுவுக்கு பதிலளிக்கும்படி வழக்கு தொடர்ந்தவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை வரும் 26-ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.
மேலும் படிக்க | முன்னாள் மனைவி மீது டி.இமான் பரபரப்பு புகார் - என்ன காரணம் தெரியுமா?
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR