கார்த்தி சிதம்பரம் மீது குற்றச்சாட்டு பதிவு செய்ய ஜனவரி 27 வரை இடைக்கால தடை
வரி ஏய்ப்பு வழக்கில் கார்த்திக்கு எதிராக குற்றச்சாட்டு பதிவு செய்ய மெட்ராஸ் உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
சென்னை: காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் மற்றும் அவரது மனைவி ஸ்ரீநிதி ஆகியோருக்கு எதிராக வரி ஏய்ப்பு செய்ததாக கீழ் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கில் குற்றச்சாட்டு பதிவு செய்ய ஜனவரி 27 ஆம் தேதி வரை இடைக்கால தடை விதித்து இன்று (செவ்வாய்க்கிழமை) சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னதாக கார்த்தி சிதம்பரம் மற்றும் அவரது மனைவி ஸ்ரீநிதி ஆகியோர் முட்டுக்காட்டில் சொத்து விற்பனை மூலம் கிடைத்த வருமானத்தில் பெற்ற ரூ .1.35 கோடி ரொக்கத்தை மறைத்ததாக வருமான வரித்துறை வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு கீழ் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதனையடுத்து, இந்த வழக்கை வழக்கு சிறப்பு நீதிமன்றத்துக்கு வருமான வரித்துறையினர் மாற்றினர்.
இந்தநிலையில், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் சிவகங்கை எம்.பி. கார்த்தி சிதம்பரம் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், இந்த வழக்கை சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டதை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரிக்கை வைக்கபட்டிருந்தது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி சுந்தர், வரும் ஜனவரி 27 ஆம் தேதி வரை காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் மற்றும் அவரது மனைவி ஸ்ரீநிதி மீது குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்ய கூடாது என சிறப்பு நீதிமன்றத்துக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார்.
உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.