விஸ்வரூபம்-2 படத்துக்கு தடையில்லை -உயர்நீதிமன்றம்!
விஸ்வரூபம்-2 படத்திற்கு தடைவிதிக்கக்கோரிய பிரமிட் சாய்மீரா நிறுவனத்தின் கோரிக்கையை நிராகரித்தது சென்னை உயர்நீதிமன்றம்!!
விஸ்வரூபம்-2 படத்திற்கு தடைவிதிக்கக்கோரிய பிரமிட் சாய்மீரா நிறுவனத்தின் கோரிக்கையை நிராகரித்தது சென்னை உயர்நீதிமன்றம்!!
நடிகர் கமல்ஹாசன் இயக்கத்தில் கடந்த 2013-ஆம் ஆண்டு வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் விஸ்வரூபம். இப்படத்தின் வெற்றியை அடுத்து இரண்டாம் பாகத்தினை உருவாக்க படக்குழுவினர் திட்டமிட்டனர். அதன்படி இப்படத்தின் இரண்டாம் பாகம் சத்தமில்லாமல் வெளியீட்டுக்கு தயாராகி விட்டது.
இப்படத்தில் கமல்ஹாசனுடன் இணைந்து ராகுல் போஸ், பூஜா குமார், ஆன்ட்ரியா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் வெளியாகவிருக்கும் இப்படத்தை ஆஸ்கர் ஃபிலிம்ஸ் ரவிச்சந்திரன் மற்றும் கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம் இண்டர்நேஷனல் இணைந்து தயாரித்துள்ளன.
கமல்ஹாசன் மற்றும் அதுல் திவாரி இணைந்து இப்படத்தின் கதையை எழுதியுள்ளனர். மேலும் ஜிப்ரான் இசையமைக்க, மகேஷ் நாராயணன் படத்தொகுப்பு செய்துள்ளார். சமீபத்தில், இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்றது.
இந்நிலையில், நேற்று இப்படத்திற்கு தடைக்கோரி பிரமிட் சாய் மீரா நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளது. மர்மயோகி படத்திற்காக கமல்ஹாசன் பெற்ற ரூ.4 கோடியை இதுவரை திருப்பித்தரவில்லை, கமல்பெற்ற ரூ. 4 கோடி சம்பளத்தை வட்டியுடன் சேர்த்து ரூ. 5.44 கோடியாக தரவேண்டும் என மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
பிரமிட் சாய் மீரா நிறுவனம் தாக்கல் செய்த மனு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில், விஸ்வரூபம்-2 படத்திற்கு தடை கோரும் வழக்கில் நடிகர் கமல்ஹாசனுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டிருந்தது.
இதையடுத்து, இந்த மனுவை விசாரணை செய்த சென்னை உயர்நீதிமன்றம் விஸ்வரூபம்-2 படத்திற்கு தடைவிதிக்கக்கோரிய பிரமிட் சாய்மீரா நிறுவனத்தின் கோரிக்கையை நிராகரித்தது உயர்நீதிமன்றம்.
பெரும் எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியுள்ள விஸ்வரூபம்-2 ஆகஸ்ட் 10-ஆம் நாள் திரையினை எட்டும் என்பது குறிப்பிடத்தக்கது!