சென்னை ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஸ்டாலினுக்கு தடை
அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்க வேண்டும் என்று கோரி வாடிவாசல் அருகில் 21 மணி நேரம் போராட்டம் நடத்திய மாணவர்கள், இளைஞர்களை போலீசார் தடியடி நடத்தி கைது செய்தனர். போராட்டக்காரர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், சென்னையில் மெரினா கடற்கரையில் கல்லூரி மாணவர்கள் ஒன்று சேர்ந்து அலங்காநல்லூரில் கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்ற போராடி வருகின்றனர். சென்னை மெரினா கடற்கரையில் மாணவர்கள், ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள், திரை பிரபலங்கள் உள்ளிட்டோர் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
சென்னையில் மெரினா கடற்கரையில் போராட்டம் நடக்கும் இடத்திற்கு திமுக செயல் தலைவர் ஸ்டாலின் சென்றார். அப்பொழுது மாணவர்கள் மற்றும் மக்கள் போராட்டத்தில் பங்குபெற மு.க.ஸ்டாலினுக்கு தடை விதித்தனர். மேலும், அரசியல்வாதிகள் போராட்டத்தில் பங்குபெற வேண்டாம் என்று அவர்கள் கோஷம் எழுப்பினர். இதனால் அங்கு சிறிது நேரம் பதற்றம் நிலவியது.
ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி தர வேண்டும் என்று கோரி இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் போலீசார் தடியடி நடத்தி கைது செய்துள்ளது. இதற்கு திமுகவின் செயல் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான மு.க. ஸ்டாலின் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.