வடக்கு வங்கக் கடலில் அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வடக்கு வங்கக் கடலில் அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்றும், இது தென் மேற்குப் பருவக்காற்றை வலுப்பெறச் செய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் வரும் 22, 23 ஆகிய தேதிகளில் ஒரு சில இடங்களில் பரவலாக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக கூறியுள்ளது. 


காற்றில் இருந்த ஈரப்பதத்தை வாயுப் புயல் எடுத்துச் சென்றதால், தென் மேற்கு பருவமழை கடந்த ஒரு வாரமாக தீவிரமாகாத நிலையில், வங்க கடலில் உருவாகும் இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, பருவக்காற்றை வலுப்பெற செய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் இன்னும் சில தினங்களில் தமிழகத்திலும், கேரளாவிலும் தென் மேற்கு பருவமழை தீவிரம் அடைய வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதனிடையே அடுத்த 24 மணி நேரத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், திருவண்ணாமலை, அரியலூர் ,கடலூர், பெரம்பலூர், திருச்சி, மதுரை, நாகப்பட்டினம், காரைக்கால் மாவட்டங்களில் அனல் காற்று வீசக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இன்று 104 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகக் கூடும் என்று கூறப்பட்டுள்ளது.


எனவே பொதுமக்கள் காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை வெளியில் செல்வதை தவிர்க்கலாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது. தென்மேற்கு பருவக்காற்று தற்போது வலுவடைந்து வருவதால் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களான நீலகிரி, கோவை, ஈரோடு, சேலம், தேனி, திண்டுக்கல், விருதுநகர், நெல்லையில் அடுத்த இரண்டு தினங்களில், மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


கடந்த 24மணி நேரத்தில் நீலகிரி மாவட்டம் குன்னூரில் 3 செண்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. 
வெப்பநிலையானது நாளை முதல் படிப்படியாக குறைய வாய்ப்பு உள்ளதாகவும், தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் ஜூலை மாதத்திலிருந்து மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.