சென்னையை அடுத்த எண்ணூர் அருகே 2 கப்பல்கள் மோதிக்கொண்ட சம்பவத்தில், ஒரு கப்பலில் இருந்த டீசல் கடலில் கொட்டியது. இங்கிலாந்து மேன் தீவிலிருந்து, திரவ காஸ் ஏற்றிக் கொண்டு, எண்ணுார் துறைமுகம் வந்து இறக்குமதி செய்து விட்டு திரும்பிய, எம்.டி.பி., டபிள்யூ மாப்பிள் என்ற கப்பலும், மும்பையில் இருந்து கச்சா எண்ணெய் ஏற்றி வந்த, டான் காஞ்சிபுரம் என்ற கப்பலும், துறைமுகத்தில் இருந்து, 1.8 நாட்டிகல் மைல் தொலைவில் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதில், டான் காஞ்சிபுரம் கப்பலில் இருந்த கச்சா எண்ணெய் கசிந்தது. இந்த டீசல் சென்னையையொட்டி உள்ள கடற்பரப்பில் மிதந்து வருகிறது. குறிப்பாக திருவொற்றியூர் பாரதியார் நகர் அருகே அதிகப்படியான டீசல் படிந்து இருக்கிறது. கடலோர காவல் படையின், சுற்றுச்சூழல் பொறுப்பு குழுவினர், 30க்கும் மேற்பட்டோர், இதை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 


இந்நிலையில், எண்ணூர் துறைமுகத்தின் பொதுமேலாளர் குப்தா அளித்த புகாரின் பேரில், டான் காஞ்சிபுரம் கப்பல் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர். விபத்தை ஏற்படுத்தி, கடல் நீரை மாசுபடுத்தியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.