எண்ணூரில் விபத்துக்குள்ளான கப்பல்கள் சிறைப்பிடிப்பு

சென்னை அருகே உள்ள எண்ணூர் துறைமுகத்துக்கு கடந்த 28-ம் தேதி கச்சா எண்ணெய் ஏற்றிவந்த கப்பலும், எரிவாயு ஏற்றி வந்த மற்றொரு கப்பலும் மோதிக்கொண்டன.
இதில் கச்சா எண்ணெய் ஏற்றி வந்த கப்பல் சேதம் அடைந்து. அதிலிருந்து கச்சா எண்ணெய் கசிந்தது. அவை பெருமளவில் கடலில் கலந்து மாசுவை ஏற்படுத்தி உள்ளது.எண்ணூர் தொடங்கி திருவொற்றியூர், ராயபுரம், மெரீனா, சாந்தோம், பெசன்ட்நகர், திருவான்மியூர் நீலாங்கரை என கிழக்கு கடற்கரை வரை எண்ணெய் படலம் பரவி மாசு ஏற்படுத்தியுள்ளது. இந்த எண்ணெய் படலத்தை அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. தீயணைப்பு வீரர்கள் தவிர கடலோர காவல் படைவீரர்கள், மாநகராட்சி ஊழியர்கள் ஆகியோருடன் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், தன்னார்வ தொண்டர்களும் எண்ணெய் படலத்தை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர். பெங்களூரில் இருந்து 2 நவீன எந்திரங்கள் வரவழைக்கப்பட்டு எண்ணெய் படலத்தை உறிஞ்சும் பணி நடைபெற்று வருகிறது.
இன்று வரை 116 டன் கச்சா எண்ணெய் படலம் அகற்றப்பட்டுள்ளதாகவும், கடலோர காவல் படை முழு ஆதரவு அளித்து வருவதாகவும் கடலோர காவல் படையின் ஐ.ஜி. தெரிவித்தார்.
இதற்கிடையே, விபத்துக்குள்ளான இரு கப்பல்களையும் சிறைப்பிடிக்கக் கோரி மீனவர்கள், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். மீனவர் நலச்சங்கம் சார்பில் இவ்வழக்கு தொடரப்பட்டது. கப்பலில் இருந்து கசிந்த எண்ணெய் மாமல்லபுரம் வரை பரவியிருப்பதாகவும், இதனால் மீன்பிடி தொழில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறிய மீனவர்கள், கப்பல்களை சிறைப்பிடித்து 100 கோடி ரூபாய் இழப்பீடு பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் கூறியிருந்தனர்.
இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், மத்திய மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி வழக்கை முடித்து வைத்தது.
இதையடுத்து, விபத்துக்குள்ளான இரண்டு கப்பல்களையும் கடலோர காவல்படை இன்று மாலை சிறைப்பிடித்துள்ளது. எண்ணூர் துறைமுக எல்லைக்குள் நிறுத்தப்பட உள்ள இந்த கப்பல்கள், பிரச்சனை முடியும் வரை விடுவிக்கப்படாது என்று கடலோர காவல்படை தெரிவித்துள்ளது.