மத்திய நிபுணர் குழு வருகை போர்க்கால அடிப்படையில் எண்ணெய் அகற்றும் பணி
மத்திய குழு சென்னை வருகை போர்க்கால அடிப்படையில் எண்ணெய் அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.
கடற்கரையோர பகுதியில் ஹெலிகாப்டர்களில் தாழ்வாக பறந்து எங்கெங்கு எண்ணெய் படலம் பரவியுள்ளது என்பதை நிபுணர்கள் கண்டறிந்து வருகிறார்கள். படம் எடுத்தும் கடற்கரையில் முகாமிட்டுள்ள அதிகாரிகளுக்கு உடனுக்குடன் அனுப்பி வருகிறார்கள்.
அவர்கள் தரும் தகவல்கள் அடிப்படையில் எண்ணெய் படலம் அகற்றப்பட்டு வருகிறது. இதன் மூலம் மற்ற பகுதிகளுக்கும் எண்ணெய் படலம் பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையே எண்ணெய் படலத்தால் சென்னை கடற்கரை பகுதி முழுவதும் மாசு அடைந்துள்ளது. இதனால் கடல்வாழ் உயிரினங்கள் பாதிப்பு அடைந்துள்ளது. இதுபற்றி மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.
இதையடுத்து சுற்றுச்சூழல் நிபுணர் குழுவை மத்திய அரசு சென்னைக்கு அனுப்பி வைத்துள்ளது. அவர்கள் இன்று சென்னை வந்து கடற்கரை பகுதியை பார்வையிடுகிறார்கள். அதன் அடிப்படையில் கடல் மாசுவை கட்டுப்படுத்த வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து அரசுக்கு அறிக்கை அளிக்கிறார்கள்.