சென்னை தியாகராய நகரில் உள்ள உஸ்மான் சாலையில் பிரபல தனியார் துணிக்கடையில் நேற்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

‘சென்னை சில்க்ஸ்’ ஜவுளிக்கடையில் ஏற்பட்ட தீயில் 7 மாடி கட்டிடமும், அதில் இருந்த கோடிக்கணக்கான மதிப்புள்ள ஜவுளிகளும் எரிந்து மிகப்பெரிய சேதத்தை ஏற்படுத்தி உள்ளது.


தீ விபத்திற்குள்ளான துணிக்கடையின் மேல்தளத்தில் தங்கியிருந்த ஊழியர்கள் 14 பேரை தீ அணைப்பு படை வீரர்கள் மீட்டுள்ளனர். 4 மணி நேரம் போராட்டத்திற்குப்பின், கிரேன் மூலம் தீயணைப்புத் துறையினர் பத்திரமாக ஊழியர்களை மீட்டனர். 


தீயணைப்பு படையினர் கடுமையாக போராடியும் தீயை கட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை. இரவு முழுவதும் கரும்புகையுடன் தீ எரிந்து கொண்டு இருந்தது. தொடர்ந்து 2-வது நாளாக தீ எரிகிறது. இதனால் கடையைச் சுற்றிலும் உள்ள பகுதிகளுக்கு அபாயகரமான பகுதியாக அறிவிக்கப்பட்டு மக்கள் நடமாட தடை விதிக்கப்பட்டது. 


தொடர்ந்து தீ எரிந்து கொண்டே இருந்ததால் இன்று கட்டிடத்தின் 4, 5, 6, 7-வது மாடிகள் இடிந்து விழுந்தது. அப்போது அந்த பகுதி முழுவதும் பயங்கர புகை மூட்டம் கிளம்பியது. 


தீவிபத்து நடந்த இடத்தில் தமிழக அரசின் வருவாய் நிர்வாக ஆணையாளர், தீயணைப்புத் துறை இணை இயக்குனர், தியாகராய நகர் துணை கமி‌ஷனர் ஆகியோர் தீயணைப்பு பணிகளை கவனித்து வருகிறார்கள்.


பின்னர் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-


சென்னை சில்க்ஸ் நிறுவனத்தின் 7 மாடி கட்டிடத்தில் துரதிருஷ்டவசமாக தீ விபத்து ஏற்பட்டு இருக்கிறது. தற்போது தீயை அணைக்கும் பணி முழு வீச்சில் நடந்து வருகிறது. தீயணைப்பு படையினர் தங்கள் உயிரை பணயம் வைத்து கட்டிடம் பாதுகாப்பற்ற நிலையில் இருந்த போதிலும் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.


இப்போது நமக்கு இருக்கும் சவாலான பணி கட்டிடத்தை பாதுகாப்பான முறையில் இடிப்பதுதான் ஆகும். இந்த கட்டிடத்தை இடிக்கும் போது அருகில் உள்ள மற்ற கட்டிடங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டு விடக்கூடாது என்பதை கவனத்தில் கொண்டு அதிகாரிகள் செயல்பட்டு வருகிறார்கள். அரசு சார்பிலேயே இந்த பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.