கொரோனா லீவ் லெட்டர் எழுதிய மாணவன்..! ஆசிரியர் அதிர்ச்சியில்!!
தனக்கு கொரோனா வைரஸ் அறிகுறி இருப்பதாக கூறி 8-ம் வகுப்பு மாணவன் ஒருவர் தலைமை ஆசிரியருக்கு எழுதிய கடிதம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
கொரோனா வைரஸின் (Coronavirus) தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. துவரை, உலகளவில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவிலிருந்து இறந்துள்ளனர். உலக சுகாதார அமைப்பு (WHO) கொரோனா வைரஸை ஒரு தொற்றுநோயாக அறிவித்துள்ளது. இந்தியாவில் இதுவரை 60 கொரோனா வைரஸ் நோயாளிகள் உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் கொரோனா வைரஸால் ஒருவர் பாதிக்கப்பட்டு, குணமடைந்து வருகிறார்.
கொரோனாவிலிருந்து காப்பாற்ற, இந்திய அரசு ஒரு பெரிய முடிவை எடுத்துள்ளது. வெளிநாட்டிலிருந்து வரும் பயணிகளின் விசாக்களை இந்தியா நிறுத்தியுள்ளது. இது தவிர, தேவையில்லை என்றால் வெளிநாட்டிற்கு செல்வதைத் தவிர்க்குமாறு மத்திய அரசு இந்திய குடிமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
இந்நிலையில் தனக்கு கொரோனா அறிகுறி இருப்பதாகக் கூறி, 8-ம் வகுப்பு மாணவன் ஒருவர் தலைமை ஆசிரியருக்கு எழுதிய கடிதம் இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த கடிதத்தில்,
``நான் தங்கள் பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கிறேன். தற்போது, நாட்டில் கொரோனா வைரஸ் பரவிவருகிறது. அது எளிதில் பரவக்கூடிய வைரஸ். எனக்கு சளி காய்ச்சல், அறிகுறி தெரிகிறது. எனவே, மற்ற மாணவர்கள் நலன்கருதி நான் நீண்ட விடுப்பு (Medical Leave) எடுத்துக்கொள்கிறேன். மேலும் சளி, காய்ச்சல் அறிகுறி உள்ள மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டாம் என்று அரசாங்கமும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. ஆகையால், நான் மற்ற மாணவர்களின் நலன்கருதி நீண்ட விடுப்பு எடுக்கிறேன். எனது விடுப்பு நாள்களை வருகை நாளாகப் பதிவுசெய்து கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக சம்பந்தப்பட்ட மாணவரை அழைத்து தலைமை ஆசிரியர் விசாரித்தார். அதில் விளையாட்டாகக் கடிதம் எழுதியதாக சிறுவன் தெரிவித்துள்ளார்.