ஆட்சியில் மட்டும் அல்ல, போட்டியிலும் நம் முதல்வர் கில்லி தான்...
குடிமைப்பணி அலுவலர்களுக்கான (IAS) - IPS அதிகாரிகளுக்கான கிரிக்கெட் போட்டியை சென்னையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று தொடங்கி வைத்தார்.
குடிமைப்பணி அலுவலர்களுக்கான (IAS) - IPS அதிகாரிகளுக்கான கிரிக்கெட் போட்டியை சென்னையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்வின் போது அவர் ஆட்டத்தை துவங்கி வைத்தது மட்டும் அல்லாமல், பேட்டிங் செய்து அதிகாரிகளை உற்சாகப்படுத்தினார். அமைச்சர் டி.ஜெயக்குமார், டி.ஜி.பி. திரிபாதி ஆகியோர் பந்து வீசி போட்டியாளர்களை வியப்பில் ஆழ்த்தினர்.
தமிழ்நாடு அகில இந்திய குடிமைப்பணி மற்றும் மத்தியப் பணி அலுவலர்களுக்கான விளையாட்டுப் போட்டி சென்னை, காமராஜர் சாலையில் உள்ள மெரினா கிரிக்கெட் மைதானத்தில் நடைப்பெற்றது. இப்போட்டியினை துவக்கி வைத்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது., விளையாட்டு என்பது உடல் ஆரோக்கியத்தையும், ஒரு கட்டுக்கோப்பான உடலையும் வளர்த்துக் கொள்வதற்கு மிக முக்கியம். அதுவும், உயர் அதிகாரிகளுக்கு பல்வேறு பணிச் சுமைகள் இருக்கிறது.
அந்த பணிச்சுமைகள் எல்லாம் குறைய வேண்டுமென்றால், விளையாட்டிலே அனைவரும் ஆர்வம் கொண்டு விளையாட வேண்டும். அப்போது தான் மனதில் இருக்கின்ற அழுத்தம் குறையும், மகிழ்ச்சி கூடும், உங்களது பணி சிறக்கும்.
எனவே, அதற்கு மிகமிக முக்கியம் விளையாட்டு. மாணவ, மாணவிகள்தான் விளையாட வேண்டும் என்பது கிடையாது. அது எந்த வயதானாலும் விளையாடலாம். விளையாடுவதற்கு உடல் ஆரோக்கியமும், உடல் வலிமையும் வேண்டும்.
ஆகவே, அந்த உடல் வலிமையையும், ஆரோக்கியத்தையும், கட்டுக்கோப்பான உடலையும் கொண்டு நேர்த்தியான ஒரு வாழ்க்கை வாழ்வதற்கு அவசியம் விளையாட்டு. அந்த விளையாட்டை இங்கே இருக்கின்ற உயர் அதிகாரிகள் மூலமாக இன்றைக்கு துவக்கியிருக்கின்றீர்கள். உங்கள் மூலமாக, நாட்டில் இருக்கின்ற இளைஞர்களும், பொதுமக்களும் பார்த்து, தாங்களும் விளையாடி உடல் ஆரோக்கியத்தை பேண வேண்டும், மன அழுத்தத்தை குறைக்க வேண்டும், மகிழ்ச்சியோடு வாழ வேண்டும் என்று தெரிவித்தார்.
இந்த நிகழ்வின் போது அமைச்சர் டி.ஜெயக்குமார், தலைமை செயலாளர் க.சண்முகம், டி.ஜி.பி. திரிபாதி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அரசு முதன்மை செயலாளர் தீரஜ்குமார், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் முதன்மைச் செயலாளர், உறுப்பினர் செயலர் ரமேஷ் சந்த் மீனா மற்றும் IAS, IPS அதிகாரிகள் பங்கேற்று சிறப்பித்தனர்.