உதயநிதி ஸ்டாலினும், அன்பில் மகேஷும் நெருங்கிய நண்பர்கள் என்பது கடந்த கால நிகழ்வுகளின் மூலம் வெளிப்படையாக தெரியவந்தது. திமுகவின் பாரம்பரிய குடும்பங்களில் இருந்து வந்த  இருவரும் ஒருவரையொருவர் நட்பு பாராட்டி வருகின்றனர். கடந்த 2016ஆம் ஆண்டு முதல் முறையாக சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்ற அன்பில் மகேஷ், சட்டப்பேரவையில் தனது கன்னிப்பேச்சில் உரையாற்றினார். அப்போது உதயநிதி ஸ்டாலின், சட்டமன்ற உறுப்பினராக இல்லை. எனினும், பார்வையாளர் மாடத்தில் இருந்தபடி அன்பில் மகேஷின் கன்னி உரையை கண்டு ரசித்தார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | பிரதமரைப் போல செயல்படுகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின் - ஆளூர் ஷா நவாஸ்


இதையடுத்து, 10 ஆண்டுகளுக்குப் பிறகு சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக வெற்றிப்பெற்று ஆட்சியில் அமர்ந்தது. அப்போது, ஆளுநர் மாளிகையில் பதவியேற்பு விழா நடைபெற்றது. எம்.எல்.ஏவாக பதவியேற்பதற்கு முன்னதாக தனது நண்பர் உதயநிதி ஸ்டாலினை கட்டியணைத்துவிட்டுத்தான் அன்பில் மகேஷ் பதவியேற்றுக் கொண்டார். அப்போதே இது பரவலாகப் பேசப்பட்டது. தற்போது அன்பில் மகேஷ், பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக பதவி வகித்து வருகிறார். தமிழக சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது. அதில், முழு நீள பட்ஜெட்டில் மானியக்கோரிக்கையில் அன்பில் மகேஷ் உரையாற்றினார். இதனை, சட்டமன்ற உறுப்பினரான உதயநிதி ஸ்டாலின், பின்னிருக்கையில் அமர்ந்தபடி வெகுவாக கண்டு ரசித்தார். இது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. தனது நண்பர் உதயநிதியிடம் பாராட்டுப் பெற்ற அன்பில் மகேஷ், தற்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடமும் பாராட்டுப் பெற்றுள்ளார். 


மேலும் படிக்க | நுழைவுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது யார் ஆட்சியில் ? - சட்டசபையில் காரசார விவாதம்


தமிழக சட்டப்பேரவையில், பள்ளிக்கல்வி மற்றும் உயர் கல்வி மீதான மானிய கோரிக்கை விவாதம் நடைபெற்றது. அப்போது பள்ளிக் கட்டிடங்கள், விடுதிகள், புதிய கலைக்கல்லூரிகள் குறித்து அடுக்கடுக்கான கேள்விகளை சட்டமன்ற உறுப்பினர்கள் முன்வைத்தனர். இந்தக் கேள்விகளையெல்லாம் குறிப்பிட்டுப் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சட்டமன்ற உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கும், அவர்கள் முன்வைத்த கோரிக்கைகளுக்கும் குறிப்புகள் ஏதும் இல்லாமல் சரளமாக பதில் வழங்கினார். இதைப் பேரவையில் உள்ள அனைத்து உறுப்பினர்களும் வியந்து பார்த்தனர். இதை உற்று நோக்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பள்ளிகல்விதுறை அமைச்சர் அன்பில் மகேஷுக்கு வாழ்த்து தெரிவித்து குறிப்பு ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், ‘தம்பி மகேஷுக்கு...அருமை.! அற்புதம்.! அபாரம்!’ என்று முதலமைச்சர் பாராட்டுத் தெரிவித்துள்ளார்.



மேலும் படிக்க | குழந்தைகளிடம் வாசிப்பை மேம்படுத்த 18 எளிய வழிகள்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துகொள்ளவும், உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைதளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


ஃபேஸ்புக்கில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR