இந்தி மொழி திணிப்பா? அமித் ஷாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் எச்சரிக்கை
இந்தி மொழி திணிப்பை மீண்டும் கையில் எடுத்தால், அதனை எக்காரணத்தைக் கொண்டும் தமிழ்நாடு ஏற்றுக் கொள்ளாது என தெரிவித்திருக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மீண்டும் மொழிப்புரட்சி காலத்தை உருவாக்கிவிடாதீர்கள் என எச்சரித்துள்ளார்.
டெல்லியில் நடைபெற்ற நாடாளுமன்ற 38வது அலுவல் மொழிக் கூட்டத்தில் பேசிய அமித்ஷா எந்த எதிர்ப்பும் இல்லாமல் இந்தி மொழியை அனைவரும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என தெரிவித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த கூட்டத்தில் அவர் பேசும்போது, " இந்தி மொழி என்பது உள்ளூர் மொழிகளுக்கு போட்டியானது இல்லை. இந்தி மொழியை ஏற்றுக்கொள்வதன் வேகம் என்பது குறைவாக உள்ளது. இருப்பினும் இறுதியில் எதிர்ப்பு இன்றி இந்தி மொழியை ஏற்க வேண்டும். பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவின் பாரம்பரியத்தை காக்கவும், மற்றும் காலனித்துவ அடையாளங்களை அழிக்கவும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளார். அதில் ஒன்று தான் ஆட்சி மொழியை வலிமைப்படுத்துவது. பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் ஒருபோதும் ஆங்கிலத்தில் உரை நிகழ்த்தியது இல்லை. அதேபோல் மத்திய அமைச்சர்களும் இந்தி மொழிகளில் உரை நிகழ்த்துகின்றனர்" என பேசியுள்ளார்.
மேலும் படிக்க | குடியரசுத் தலைவரை வரவேற்க உன்னி செடியால் யானை உருவம்!
அவரின் இந்தப் பேச்சுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். எக்காரணத்தைக் கொண்டும் இந்தி மொழி திணிப்பை ஏற்க முடியாது என்று கூறியிருக்கும் அவர், மீண்டும் மொழிப் புரட்சி காலத்தை உருவாக்கிவிடாதீர்கள் என எச்சரித்துள்ளார். இது தொடர்பாக அவர் டிவிட்டரில் எழுதியிருக்கும் பதிவில், " எதிர்ப்பின்றி அனைவரும் இந்தியை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் பேச்சு, மற்ற மொழி பேசும் அனைத்து இன மக்களையும் இந்திக்குக் கொத்தடிமை ஆக்கும் எதேச்சாதிகார முயற்சியாகும். இதைக் கேட்டு நடக்க தமிழ்நாடு தலையாட்டி பொம்மை மாநிலம் அல்ல!
தமிழ்நாட்டுக்கு வந்தால் தொன்மையான மொழி என்று நாக்கில் தேன் தடவுவதும், டெல்லிக்குச் சென்றதும் நஞ்சைப் பரப்புவதும் பா.ஜ.க.வின் பசப்பு அரசியல் என்பதை அனைவரும் அறிவோம். இந்தித் திணிப்பை இப்போது மேற்கு வங்கமும், கர்நாடகமும் எனப் பல மாநிலங்களும் கடுமையாக எதிர்க்கத் தொடங்கி இருப்பதை மாண்புமிகு அமித் ஷா அவர்கள் உணர வேண்டும். 1965 மொழிப்புரட்சிக் காலத்தை மீண்டும் உருவாக்கி விடாதீர்கள் என எச்சரிக்கிறேன்!" என்று கூறியுள்ளார்.
ஏற்கனவே, தமிழ் மொழி வளர்ச்சிக்காக மத்திய அரசு வெறும் 74 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கி, சமஸ்கிருத வளர்ச்சிக்கு மட்டும் ரூ.1,487.9 கோடி ஒதுக்கியது அனையாத கனலாக இன்னும் புகைந்துக் கொண்டிருக்கும் இந்த சூழலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் இந்தப் பேச்சு அரசியல் களத்திலும் சலசலப்பை உருவாக்கியுள்ளது.
மேலும் படிக்க | திருவண்ணாமலையில் அரசு பேருந்து கவிழ்ந்து பெரும் விபத்து..! பயணிகளுக்கு படுகாயம்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ