கஜா புயலும் - தமிழக அரசும் - முதல்வரின் விரிவான விளக்கம்!
கஜா புயல் பாதிப்பினை எதிர்கொள்ள தமிழக அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி விரிவான விளக்க அறிக்கை வெளியிட்டுள்ளார்.
கஜா புயல் பாதிப்பினை எதிர்கொள்ள தமிழக அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி விரிவான விளக்க அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இந்த அறிக்கையில் அவர் குறிப்பிடுள்ளதாவது...
‘கஜா’ புயல் வங்கக் கடலில் நிலை கொண்டிருப்பதாகவும், இது நாகப்பட்டினம் மற்றும் சென்னை இடையே கரையைக் கடக்கக் கூடும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் 11.11.2018 அன்று அறிவிப்பினை வெளியிட்டது.
இதனைத் தொடர்ந்து, எனது தலைமையில் 12.11.2018 அன்று, தலைமைச் செயலாளர் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் ஆகியோருடன் புயல் தாக்கம் தொடர்பாக எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டது. இக்கூட்டத்தில் அரசின் பல்வேறு துறைகள் ஒருங்கிணைந்து மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்தும் நான் அறிவுரை வழங்கினேன். எனது உத்தரவின் பேரில், மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள், பாதிப்பு ஏற்படக்கூடிய பகுதிகளை சேர்ந்த மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் பல்வேறு துறைத் தலைவர்கள், புயல், வெள்ளம் ஆகியவற்றை சமாளிப்பதற்கான முன்னேற்பாடுப் பணிகளை உடனடியாக துவக்கினர்.
நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், கடலூர், ராமநாதபுரம், புதுக்கோட்டை, திருச்சி உள்ளிட்ட மாவட்ட நிர்வாகங்கள் முழுமையான ஆயத்த நிலையில் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டது. மேலும், மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் மற்றும் மூத்த இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளவும், புயலினால் ஏற்படும் சேதங்களை குறைக்கும் பொருட்டும், இடர்ப்பாடுகளை தணிக்கும் பொருட்டும், மாவட்டங்களுக்கு கண்காணிப்பு அலுவலர்களாக அனுப்பப்பட்டனர். தேசிய பேரிடர் மீட்புப் படையை சேர்ந்த ஏழு குழுக்கள் மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படையைச் சேர்ந்த 4 குழுக்கள் மேற்கண்ட மாவட்டங்களில் முன்னெச்சரிக்கையாக நிறுத்தி வைக்கப்பட்டனர். பல்துறையைச் சேர்ந்த மண்டல குழுக்கள், முதல் நிலை மீட்பாளர்கள் மற்றும் பயிற்சியளிக்கப்பட்ட 200 தன்னார்வலர்களும் பாதிப்பு
ஏற்படக்கூடிய பகுதிகளுக்கு தயார் நிலையில் அனுப்பி வைக்கப்பட்டனர்.
மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்தில் நேற்று (15.11.2018) முதல் மாண்புமிகு வருவாய் துறை அமைச்சர் திரு.ஆர்.பி.உதயகுமார் அவர்கள், வருவாய்த் துறை அரசு முதன்மைச் செயலர் மற்றும் வருவாய் நிருவாக ஆணையர் மற்றும் மாநில நிவாரண ஆணையர் அவர்களும் புயலின் தாக்கத்தையும், எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் அவ்வப்போது கள அலுவலர்களுடன் பகிர்ந்து கொண்டனர். பொதுமக்கள் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஊடகங்கள் மூலம் அவ்வப்போது அறிவுறுத்தப்பட்டனர். ‘கஜா’ புயல் 15.11.2018 அன்று இரவு நாகப்பட்டினம் அருகில் கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் 15.11.2018 அன்று அதிகாலை 2.30 மணிக்கு தெரிவித்ததையடுத்து, தாழ்வான பகுதிகளில் இருந்த 81,948 பேர் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு, 471 புயல் பாதுகாப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டதுடன், உணவு, பாதுகாப்பான குடிநீர் ஆகியவை வழங்கப்படுகின்றன. மேலும், பாய், போர்வை ஆகியவைகளும் அவர்களுக்கு வழங்கப்பட்டன. ஜெனரேட்டர் வசதிகளும் இந்த முகாம்களில் அமைக்கப்பட்டுள்ளன.
புயல் மற்றும் மழை காரணமாக ஏற்படக் கூடிய நோய்களை தடுக்கும் விதமாக 216 மருத்துவ முகாம்களும், நடமாடும் மருத்துவ முகாம்களும் அமைக்கப்பட்டுள்ளன. தேவைக்கேற்ப, கூடுதல் மருத்துவ முகாம்கள் அமைக்க சுகாதாரத் துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், தொற்றுநோய் தடுப்புக் குழுக்களும், உணவு பாதுகாப்பு குழுக்களும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இம்மாவட்டங்களில் 405 ஆம்புலன்ஸ் வாகனங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. ‘கஜா புயல்’ காரணமாக ஏற்படக்கூடிய மின் விநியோக பாதிப்புகளை சீர் செய்ய ஏற்கனவே 7,000 மின் கம்பங்கள் இம் மாவட்டங்களுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனுப்பப்பட்டன. மேலும், கூடுதலாக பிற மாவட்டங்களிலிருந்து, மின் பணியாளர்கள் பாதிப்பு ஏற்படக்கூடிய மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டனர். தங்கு தடையின்றி பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க தேவையான ஜெனரேட்டர்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. 110 கி.மீ வேகத்தில் காற்று வீசியதால், முதற்கட்ட அறிக்கையின் படி சுமார் 13,000 மின் கம்பங்கள் சாய்ந்துள்ளன. அவற்றை சீர்செய்து, மின் விநியோகம் இயல்பு நிலைக்கு கொண்டு வர போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது.
‘கஜா’ புயல் கரையைக் கடந்ததன் காரணமாக முதற்கட்ட அறிக்கையின் படி சுமார் 5,000 மரங்கள் வேருடன் சாய்ந்து சாலைகளில் விழுந்துள்ளன. மரங்களை வெட்டி அப்புறப்படுத்த மின் ரம்பங்கள் மற்றும் துஊக்ஷ இயந்திரங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. பொறியாளர்கள், சாலை ஆய்வாளர்கள் உள்ளிட்ட பணியாளர்கள் இப்பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சாலைகளில் விழுந்துள்ள மரங்கள் போக்கால அடிப்படையில் அப்புறப்படுத்தப்பட்டு, சாலைப் போக்குவரத்து சீர்செய்யப்பட்டு வருகிறது. சாய்ந்த மரங்களை திரும்ப நடக்கூடிய சாத்திக்கூறு உள்ள இடங்களில் அவற்றை திரும்ப நடுவதற்கும் நான் உத்தரவிட்டுள்ளேன்.
புயலால் ஏற்பட்ட சேதங்களை உடனடியாக ஆய்வு செய்து கணக்கீடு செய்யுமாறு மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மற்றும் வருவாய்த் துறையினருக்கு நான் உத்தரவிட்டுள்ளேன். குறிப்பாக, புயல் மற்றும் கனமழையால் உயிரிழந்த கால்நடைகள், பாதிப்படைந்த வீடுகள், பயிர்கள், மரங்கள் மற்றும் சேதமடைந்த மீன் பிடி படகுகள் ஆகியவற்றை ஆய்வு செய்து உடனடியாக அறிக்கை அனுப்புமாறு சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் அரசுத் துறை செயலாளர்களுக்கு நான் உத்தரவிட்டுள்ளேன்.
‘கஜா’ புயல் மற்றும் கன மழை காரணமாக 13 பேர் உயிரிழந்துள்ளனர் என்ற செய்தியை அறிந்து நான் மிகவும் வருத்தமடைந்தேன். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களது குடும்பங்களுக்கு நிவாரணமாக தலா 10 லட்சம் ரூபாய் வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன். மேலும், ‘கஜா’ புயல் மற்றும் கன மழை காரணமாக படுகாயமடைந்தவர்களுக்கு தலா 1 லட்சம் ரூபாயும், சாதாரண காயமடைந்தவர்களுக்கு தலா 25,000 ரூபாயும் வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.
மேலும், ‘கஜா’ புயலால் பாதிப்படைந்த பகுதிகளில் காவல் பணிகளை ஒருங்கிணைக்க நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு கூடுதல் காவல் துறை தலைமை இயக்குநர் திரு. ஷகீல் அக்தர், இ.கா.ப., அவர்களும், திருவாரூர் மாவட்டத்திற்கு கூடுதல் காவல் துறை தலைமை இயக்குநர் திரு. தாமரைக் கண்ணன், இ.கா.ப., அவர்களும், தஞ்சாவூர் மாவட்டத்திற்கு கூடுதல் காவல் துறை தலைமை இயக்குநர் திரு. ரவி, இ.கா.ப., அவர்களும் மற்றும் பாதிப்படைந்த ரயில்வே பகுதிகளை சீரமைக்க கூடுதல் காவல் துறை தலைமை இயக்குநர் திரு. சைலேந்திர பாபு, இ.கா.ப., அவர்களையும் நியமனம் செய்து நான் உத்தரவிட்டுள்ளேன்.
ஏற்கனவே, எனது உத்தரவின் பேரில், மாண்புமிகு தொழில் துறை அமைச்சர் திரு. எம்.சி சம்பத், மாண்புமிகு உணவு மற்றும் உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு. ஆர். காமராஜ், மாண்புமிகு கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் திரு. ஒ.எஸ் மணியன், மாண்புமிகு மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சர் திரு. சி. விஜயபாஸ்கர், மாண்புமிகு வேளாண்மைத் துறை அமைச்சர் திரு. ஆர். துரைக்கண்ணு மற்றும் மாண்புமிகு தகவல் தொழில் நுட்பத் துறை அமைச்சர் டாக்டர் மணிகண்டன் ஆகியோர் அந்தந்த மாவட்டங்களில் இரவு, பகலாக மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
‘கஜா’ புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை உடனடியாக சீர் செய்து, அனைத்து நிவாரணம் மற்றும் சீரமைப்பு பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு, பாதிக்கப்பட்ட மாவட்டங்கள் இயல்பு நிலைக்கு திரும்ப தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள நான் உத்தரவிட்டுள்ளேன். இந்த நடவடிக்கைகளை ஒருங்கிணைக்க மாண்புமிகு வனத் துறை அமைச்சர் திரு. திண்டுக்கல் சி சீனிவாசன், மாண்புமிகு மின்சாரம், மது விலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் திரு. பி தங்கமணி, மாண்புமிகு நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்பு திட்ட செயலாக்கம் துறை அமைச்சர் திரு. எஸ்.பி.வேலுமணி, மாண்புமிகு மீன் வளம் மற்றும் பணியாளர் நிர்வாக சீர்திருத்தத் துறை அமைச்சர் திரு. டி.ஜெயகுமார் மற்றும் மாண்புமிகு வருவாய்த்துறை அமைச்சர் திரு. ஆர்.பி உதயகுமார் ஆகியோர் எனது உத்தரவின் பேரில் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்." என தெரிவித்துள்ளார்!