இலங்கை சிறையில் உள்ள 46 மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமருக்கு முதலமைச்சர் வலியுறுத்தல்!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துச் சென்ற 46 மீனவர்கள் மற்றும் 26 படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு, தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார். 


பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் எழுதியுள்ள கடிதத்தில், கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் 9 வெவ்வேறு சம்பவங்கள் மூலமாக ராமநாதபுரம், தஞ்சை, புதுக்கோட்டை, நாகை மாவட்டங்களைச் சேர்ந்த 42 மீனவர்கள் இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார். மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் வீடு திரும்பாத காரணத்தால் அவர்களின் உறவினர்கள் துயரத்தில் ஆழ்ந்திருப்பதுடன், குடும்பமும் வறுமைக்கு தள்ளப்படும் நிலை ஏற்பட்டதாக முதலமைச்சர் கூறியுள்ளார்.


கடந்த பல மாதங்களாக பிடித்து வைக்கப்பட்டுள்ள 26 மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு பிரதமரை அவர் கேட்டுக் கொண்டுள்ளார். மீனவர்களின் நீண்ட கால பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என குறிப்பிட்டுள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, 46 மீனவர்கள் மற்றும் 26 மீன்பிடிப் படகுகளை மீட்க தூதரக ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளார்.