10-ம் வகுப்பு தேர்வு முடிவு: ரேங்க் பட்டியல் வெளியிட தடை
இன்று வெளியாகும், 10ம் வகுப்பு தேர்வு முடிவின்போது, பள்ளி அளவில் முதலிடம் பிடிக்கும் மாணவர்களின் பட்டியலை வெளியிடக்கூடாது' என, பள்ளிகளுக்கு, சேலம் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் ஞானகவுரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தமிழகத்தில் கடந்த வாரம் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவு வெளியானது. மதிப்பெண்களை அடிப்படையாக வைத்து தனியார் பள்ளிகள் நடத்தும் வணிகத்தை தடுக்கும் நோக்கில், 'மாநில, மாவட்ட அளவிலான ரேங்க் எடுக்கும் மாணவர்களின் பெயர்கள் அறிவிக்கப்படக்கூடாது' என, அரசாணை வெளியிடப்பட்டது.
அதே போல், மாநில மற்றும் மாவட்ட அளவில், அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களின் பெயர்களும் வெளியிடப்படவில்லை.
ஆனால், தனியார் பள்ளிகள், தங்கள் பள்ளிகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களின் விபரங்களை வெளியிட்டு, விளம்பரம் தேடின. சில பள்ளிகள் வேறு பள்ளியில் நல்ல மதிப்பெண் பெற்ற மாணவியரை, தங்கள் பள்ளியில் படித்து மதிப்பெண் பெற்றதாகவும் விளம்பரம் தேடிடியது. ஒரு சில மாணவர்களின் பெயர்களை ரேங்க் வரிசையில் தெரிவிக்கும் போது, மற்ற மாணவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர் என்ற காரணத்துக்காக இந்த முறையை அரசு அறிவித்தது. ஆனால் தனியார் பள்ளிகளின் இந்த செயலால் அதே சூழல் நீடிப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதையடுத்து, இன்று வெளியாகும், 10ம் வகுப்பு பொதுத்தேர்வில், பள்ளி அளவில் முதல் இடம் பிடிக்கும் மாணவர்களின் விபரங்களையும் வெளியிடக்கூடாது என, பள்ளிகளுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.