கடந்த மே 23-ம் தேதி ஜெயலலிதா 6-வது முறையாகவும் தொடர்ந்து இரண்டாவது முறையாகவும் தமிழக முதல்-அமைச்சராக பதவி ஏற்றவுடன் 5 கோப்புகளில் கையெழுத்திட்டார். அதில் ஒன்று, மதுக்கடைகளின் விற்பனை நேரத்தை 2 மணி நேரம் குறைப்பது மற்றும் 500 மதுக்கடைகளை மூடுவது என்பதாகும். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதைத்தொடர்ந்து, காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை இயங்கி வந்த மதுக்கடைகள் மதியம் 12 மணி முதல் இரவு 10 மணி வரை செயல்படத் தொடங்கின. அதன் தொடர்ச்சியாக, தமிழகம் முழுவதும் மூடப்பட வேண்டிய 500 மதுக்கடைகளை தேர்வு செய்யும் பணி நடைபெற்று வந்தது. 


ஒவ்வொரு பகுதியிலும் மூடப்படும் கடைகள் என மொத்தம் 500 டாஸ்மாக் கடைகளின் பட்டியலை தமிழக அரசு நேற்று முன்தினம் அறிவித்தது.


அதன்படி, தமிழகம் முழுவதும் சென்னை மண்டலத்தில் 58 மதுக்கடைகள், கோவை மண்டலத்தில் 60 மதுக்கடைகள், மதுரை மண்டலத்தில் 201 மதுக்கடைகள், திருச்சி மண்டலத்தில் 133 மதுக்கடைகள், சேலம் மண்டலத்தில் 48 மதுக்கடைகள் என மொத்தம் 500 மதுக்கடைகள் நேற்று முதல் மூடப்பட்டன. 


தற்போது மூடப்பட்டுள்ள 500 மதுக்கடைகளில் பணியாற்றிய ஊழியர்கள் அந்தந்த மண்டலங்களில் ஏற்கனவே காலி பணியிடங்கள் உள்ள மதுக்கடைகளில் நியமிக்கப்படுவார்கள். எஞ்சி இருப்பவர்கள் மற்ற மண்டலங்களில் உள்ள மதுக்கடைகளுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள்.


500 டாஸ்மாக் மதுபான கடைகள் மூடப்பட்டதற்கு தமிழக பாரதீய ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் வரவேற்பு தெரிவித்து உள்ளனர். இதேபோல் பொதுமக்களும் வரவேற்பு தெரிவித்து இருக்கிறார்கள்.