கொரோனா பணியில்.. உயிரிழந்த அலுவலர் குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் நிதியுதவி: முதல்வர்
கொரோனா வைரஸ் பணியில் இருந்த கிராம நிர்வாக அலுவலரின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்த தமிழக முதல்வர் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அவர்களின் குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் நிதியுதவி அளிக்க உத்தரவிட்டுள்ளார்.
சென்னை: கொரோனா வைரஸ் பணியில் இருந்த கிராம நிர்வாக அலுவலரின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்த தமிழக முதல்வர் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அவர்களின் குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் நிதியுதவி அளிக்க உத்தரவிட்டுள்ளார். விபத்து மூலம் இறந்தவர் திருச்சி மாவட்டத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கிராம நிர்வாக அலுவலர் குடும்பத்தை சேர்ந்த ஒருவருக்கு தகுதி அடிப்படையில் அரசு வேலை வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளார்.
இதுக்குறித்து தனது சமூக வலைத்தளம் பக்கத்தில், ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில் கூறியதாவது,
திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் வட்டம், சிறுகமணி மேற்கு கிராமத்திலுள்ள சேதுராப்பட்டி அரசினர் பொறியியல் கல்லூரியில், விமானம் மூலம் வெளிநாட்டிலிருந்து வந்த பயணிகள், தனிமைப்படுத்தப்பட்டு, அங்கு தங்க வைக்கப்பட்டிருந்தனர். அவர்களை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த கிராம நிர்வாக அலுவலர் குமார் என்பவர், கடந்த 13 ஆம் தேதி தன்னுடைய பணியை முடித்து வீடு திரும்பும் போது, மதுரை - சென்னை பைபாஸ் சாலையில், தனியார் வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்ற செய்தியை அறிந்து நான் மிகுந்த வேதனை அடைந்தேன்.
கரோனா வைரஸ் தொற்று நோய் பணியில் ஈடுபட்டிருந்த போது உயிரிழந்த கிராம நிர்வாக அலுவலர் குமாரை இழந்து வாடும் அன்னாரது குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
குமார் அவர்களின் குடும்பத்திற்கு சிறப்பினமாக, முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து 50 லட்சம் ரூபாய் நிவாரணமாக வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன். மேலும், அன்னாரது குடும்பத்தில் ஒருவருக்கு தகுதியின் அடிப்படையில் அரசுப் பணி வழங்கவும் நான் உத்தரவிட்டுள்ளேன்.
இவ்வாறு தனது அறிவிப்பில் கூறியுள்ளார்