பள்ளி வாகனம் ஓட்டும் போது நெஞ்சுவலி ஏற்பட்ட போதிலும் தனது உயிரை கொடுத்து பள்ளி குழந்தைகளை காப்பாற்றிய வேன் ஓட்டுனருக்கு இரங்கல் தெரிவித்துள்ளார் முதலமைச்சர் முக ஸ்டாலின். திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அடுத்த வெள்ளகோவில் கே.பி.சி நகரை சேர்ந்தவர் சேமலையப்பன் (வயது 49). வெள்ளகோவில் அய்யனூர் அருகே உள்ள தனியார் மெட்ரிக் பள்ளியில் கடந்த 8 மாதங்களாக வேன் டிரைவராக வேலை செய்து வந்தார். இவர் நேற்று மாலை பள்ளி முடிந்து 20 குழந்தைகளை வேனில் அழைத்து சென்றுள்ளார். அதே வேனில் மனைவி லலிதாவும் உதவியாளராக பணியாற்றிவருகின்றார். இந்நிலையில் வேன் வெள்ளகோவில் காவல் நிலையம் அருகே கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வேன் வந்து கொண்டிருந்தபோது திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. மிகவும் சிரமப்பட்டு வேனை சாலையின் ஓரமாக நிறுத்திவிட்டு வேன் ஸ்டேரிங்கில் மயங்கி சரிந்து விழுந்தார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | நிதிஆயோக் கூட்டத்தை புறக்கணிக்கக்கூடாது - தமிழிசை சவுந்திரராஜன் வலியுறுத்தல்


இதைக் கண்ட பள்ளி மாணவ மாணவிகள் பயத்தில் அலறி அடித்தனர். உடன் இருந்த மனைவி லலிதாவும் கதறினார். அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் என்னமோ எதோ என பதறிஅடித்துக்கொண்டு வேனில் உள்ளே சென்று பார்த்துவிட்டு உடனடியாக பொதுமக்கள் மற்றும் காவல்துறை உதவியுடன் சேமலையப்பனை காங்கேயம் அரசு தலைமை மருத்துவமனைக்கு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் அழைத்துச் சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். பின்னர் சடலத்தை பிரேத பரிசோதனைக்கு காங்கேயம் அரசு தலைமை மருத்துவமனை சவக்கிடங்கில் வைத்தனர். வேன் ஓட்டும் போதே நெஞ்சுவலி வந்து மயங்கி விழும் நிலையிலும் வேனில் உள்ள  குழந்தைகளின் உயிரை காப்பாற்றி விட்டு தன் உயிரை விட்டதாக  வெள்ளகோவில், காங்கேயம் பகுதிகளில் சமூக வலைத்தளங்களில் அவரின் புகைப்படங்கள் வைரல் ஆகி வருகிறது.


இறந்து போன சேமலையப்பனுக்கு உமா, ஜானகி, லலிதா ஆகிய மூன்று மனைவிகள் உள்ளனர் தற்போது லலிதா மட்டும் இவருடன் உள்ளார். லலிதாவிற்கு ஹரிஹரன் (வயது 17), ஹரிணி (வயது 15) என்று இரண்டு குழந்தைகள் உள்ளனர். சம்பவம் பற்றி லலிதா கொடுத்த புகாரின் பேரில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் பள்ளிக் குழந்தைகளை காப்பாற்றி தனது உயிரை கொடுத்துள்ள வாகன ஓட்டுநர் சேமலையப்பன் குடும்பத்தினருக்கு முதல்வர் முக ஸ்டாலின் ஆறுதல் மற்றும் நிதியுதவி அளித்துள்ளார். இது தொடர்பாக வெளியாகியுள்ள அறிக்கையில், " திருப்பூர் மாவட்டம், வெள்ளக்கோவிலில் உள்ள தனியார் பள்ளியில் வாகன ஓட்டுநராக பணிபுரிந்துவந்த காங்கேயம், சத்யா நகரைச் சேர்ந்த திரு.சேமலையப்பன் (வயது 49) என்பவர் நேற்று (24.07.2024) மாலை பள்ளி முடிந்தவுடன் பள்ளிக் குழந்தைகளை அழைத்துக்கொண்டு கோவை திருச்சி நெடுஞ்சாலை வெள்ளக்கோவில் பழைய காவலர் குடியிருப்பு அருகே வந்துகொண்டிருந்தபோது தனக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதால் உடனடியாக தான் ஒட்டிவந்த பள்ளி வாகனத்தில் இருந்த பள்ளிக் குழந்தைகளுக்கு எந்த ஆபத்தும் ஏற்படாத வகையில் பத்திரமாக நிறுத்தி பின்னர் உயிர் நீத்தார் என்ற செய்தியைக் கேட்டு மிகவும் வருத்தமும், வேதனையும் அடைந்தேன்.


தனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருந்த நிலையிலும் தன் பொறுப்பிலிருந்த பள்ளிக் குழந்தைகளின் விலைமதிப்பில்லாத உயிர்களை காப்பாற்றி பின்னர் தனது இன்னுயிரை இழந்த திரு. சேமலையப்பன் அவர்களின் கடமை உணர்ச்சியையும் தியாக உள்ளத்தையும் நாம் தலைவணங்கி போற்றுகிறோம்.
காலம் சென்ற பள்ளி வாகன ஒட்டுநர் திரு. சேமலையப்பன் அவர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, உயிரிழந்த திரு. சேமலையப்பன் அவர்களின் குடும்பத்தினருக்கு ரூபாய் ஐந்து இலட்சம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் படிக்க | பிரேக் அப் செய்த டியூஷன் டீச்சர்! பழி வாங்கிய பள்ளி மாணவன்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ