கேலோ இந்தியா 2024: மேடையில் பிரதமர் மோடி... மணிப்பூர் பிரச்னையை நினைவூட்டிய முதல்வர்!
Khelo India 2024: சென்னை நேரு விளையாட்டு அரங்கில் கேலோ இந்தியா விளையாட்டு போட்டி தொடரின் தொடக்க விழாவில் பிரமதர் மோடி, முதலமைச்சர் ஸ்டாலின் ஆகியோர் பேசியதின் சுருக்கத்தை இதில் காணலாம்.
PM Modi, CM Stalin Khelo India 2024 Speech: சென்னை, திருச்சி, ராமநாதபுரம் என தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி மூன்று நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். இதற்காக, பெங்களூருவில் இருந்து சிறப்பு விமானம் மூலம் சென்னை வந்த பிரதமர் மோடிக்கு விமான நிலையத்திலேயே தமிழ்நாடு அரசு சார்பிலும், பல்வேறு தலைவர்கள் சார்பிலும் வரவேற்பு அளிக்கப்பட்டது.
உளி ஓவியங்கள் புத்தகம் பரிசளிப்பு
தொடர்ந்து ஹெலிகாப்டர் மூலம் அடையார் ஐஎன்எஸ் தளத்திற்கு சென்ற பிரதமர் மோடி, அங்கிருந்து கார் மூலம் சாலை வழியாக சென்னை பெரிய மேட்டில் உள்ள நேரு விளையாட்டு அரங்கத்திற்கு சென்றார். அங்கு பிரதமர் மோடிக்கு, உளி ஓவியங்கள் என்ற புத்தகத்தை முதலமைச்சர் ஸ்டாலின் பரிசளித்தார். நிகழ்ச்சியில் தமிழ்நாடு அமைச்சர்கள், விளையாட்டு வீரர்கள் என பலர் கலந்துகொண்டனர்.
அங்கு 6ஆவது கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டி தொடரை பிரதமர் மோடி தொடங்கிவைத்தார். மேலும், டிடி பொதிகை சேனல் டிடி தமிழ் என பெயர் மாற்றம் செய்யப்பட்டு ஹெச்.டி. தொழில்நுட்பத்தில் ஒளிப்பரப்ப உள்ள நிலையில், அதன் புதிய லோகோவை பிரதமர் மோடி அறிமுகம் செய்தார்.
மேலும், 12 புதிய பண்பலை அலைவரிசைகளுக்கு அவர் அடிக்கல் நாட்டினார். இவ்விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என். ரவி, ஒன்றிய அமைச்சர் அனுராக் தாக்கூர், ஒன்றிய இணை அமைச்சர் நிஷித் பிரமானிக், ஒன்றிய இணையமைச்சர் எல்.முருகன், தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.
மேலும் படிக்க | அயோத்தி ராமர் கோயில் கட்டுவதற்கு எவ்வளவு செலவானது? நீங்கள் அறியாத தகவல்கள் இதோ!
சாதனைகளை நிகழ்த்தும் திராவிட மாடல் அரசு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடக்க உரை ஆற்றினார். உரையில் முதலமைச்சரை முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என உதயநிதி அழைத்தார். அவர் பேசியதன் சுருக்கத்தை இதில் காணலாம். அதில்,"திராவிட மாடல் அரசு விளையாட்டுத்துறையில் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தி வருகிறது. சர்வதேச அளவில் நிறைய போட்டிகளை தமிழ்நாடு வெற்றிகரமாக நடத்தி உள்ளது.
அந்த வரிசையில் 44 வது செஸ் ஒலிம்பியாட், ஆசிய ஹாக்கி சாம்பியன்ஷிப், உலகக் கோப்பை ஸ்குவாஷ், சர்வதேச அளவிலான சைக்களாத்தான், கேலோ இந்தியா இளையோர் விளையாட்டுப்போட்டி என தொடர்ந்து வெற்றி நடை போடுகிறது. தமிழ்நாடு சாம்பியன் ஃபவுண்டேஷன் தமிழ்நாட்டின் விளையாட்டு வளர்ச்சிக்கு ஊக்க சக்தியாக திகழ்கிறது. கேலோ இந்தியா 2023 தமிழ்நாட்டில் புது வரலாறு படைக்க காத்திருக்கிறது" என்றார்.
மணிப்பூர் பிரச்னையை நினைவூட்டிய முதல்வர்
முதலமைச்சர் ஸ்டாலின் ஆங்கிலத்தில் தனது உரையை தொடங்கினார். தொடர்ந்து பேசிய அவர், "எல்லாருக்கும் எல்லாம், அனைத்து துறை வளர்ச்சி, அனைத்து மாவட்டமும் வளர்ச்சி என்பதே திமுக அரசின் நோக்கம். அனைத்திலும் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக வளர உழைத்துள்ளோம். செஸ் ஒலிம்பியாட், ஏடிபி சேலஞ்சர்ஸ் டென்னிஸ், ஆசிய ஹாக்கி சாம்பியன்ஷிப், உலகக் கோப்பை ஸ்குவாஷ், சர்வதேச அலைச்சறுக்கு போட்டி, சென்னை மாஸ்டர் செஸ் என விளையாட்டுத்துறையில் எண்ணற்ற போட்டிகளை நடத்தியுள்ளோம்.
மேலும் படிக்க | ராமேஸ்வரம் செல்லும் பிரதமர் மோடி
முதற்கட்டமாக 10 மாவட்டங்களில் மினி ஸ்டேடியம் அமைக்கப்பட்டு வருகிறது. 62 கோடி ரூபாய் செலவில் ஜல்லிக்கட்டு மைதானம் கட்டப்பட்டுள்ளது. கேலோ இந்தியா போட்டியின் லோகோவில் வான்புகழ் வள்ளுவர் இடம்பெற்றுள்ளார். அந்த சிலை முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியால் நிறுவப்பட்டது. வீர மங்கை வேலுநாட்சியார் லட்சினை நமக்கெல்லாம் பெருமை. அன்பு பாலங்களையும், சமூக நல்லிணக்கத்தையும் விளையாடடு உருவாக்கும். இவர்கள் கேலோ இந்தியா விளையாட்டுப்போட்டியில் பங்கேற்பது நமக்கெல்லாம் பெருமை" என்றார்.
தொடர்ந்து முதலமைச்சர் பிரதமர் முன்னிலையில், மணிப்பூர் கலவரத்தை நினைவூட்டி பேசினார். அதில், "மணிப்பூரில் பிரச்சினை ஏற்பட்ட போது, அங்கே விளையாட முடியாத வீரர்களை, தமிழகத்திற்கு அழைத்து, மணிப்பூர் வீரர்களுக்கு சகோதர உணர்வோடு வரவேற்று பயிற்சி கொடுக்கப்பட்டது. அவர்களும் இந்த போட்டி தொடரில் பங்கேற்றுள்ளனர்" என்றார்.
பிரதமர் புகழாரம்
பிரதமர் மோடி 'வணக்கம் சென்னை' என்று கூறி தனது பேச்சை தொடங்கினார். பிரதமர் மோடி பேசியதாவது, "2024 தொடக்கத்தின் இந்த நிகழ்வு சிறப்பான தொடக்கமாகும். அழகிய தமிழ் மொழி கலாச்சாரம் உணவு ஆகியன உங்கள் வீட்டில் நீங்கள் இருப்பது போன்ற உணர்வை உங்களுக்கு அளிக்கிறது. தமிழர்களின் விருந்தோம்பல் உங்கள் இதயங்களை கொள்ளைகொல்லும். இந்த விருந்தோம்பலை பார்க்கும்போது சொந்த ஊருக்கு வந்ததுபோல் இருக்கிறது.
1975ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்பை தொடங்கிய சென்னை தூர்தர்ஷன் இன்று ஒரு புதிய பயணத்தை மேற்கொள்ள உள்ளது" என்றார். மேலும், சாம்பியன்களை உருவாக்கும் பூமியாக தமிழ்நாடு விளங்குவதாக பேசிய பிரதமர் மோடி ஹாக்கி பாஸ்கரன், செஸ் கிராண்ட் மாஸ்டர்கள் விஸ்வநாதன் ஆனந்த், பிரக்ஞானந்தா, பாரா ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற தடகள வீரர் மாரியப்பன் தங்கராஜ் ஆகியோரை பெருமைப்படுத்தினார்.
மேலும் பேசிய அவர், "2018 முதல் 11 வகையான கேலோ இந்தியா விளையாட்டுப்போட்டிகள் நடத்தப்பட்டுள்ளன. தமிழ்நாட்டின் பாரம்பரிய விளையாட்டான சிலம்பத்தை காண ஆர்வமாக இருக்கிறேன்.
கேலோ இந்தியா விளையாட்டு போட்டியின் இலட்சினை வீர மங்கை உருவாக்கப்பட்டிருப்பது எனது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. கோலோ இந்தியா விளையாட்டு திட்டம் ஒடுக்கப்பட்ட, நலிவடைந்து இளைஞர்களுக்கு உதவியாக அமைந்துள்ளது. இந்தியாவை உலக விளையாட்டு கட்டமைப்பின் மையமாக இந்தியா மாற வேண்டும் என்பதே அடுத்த இலக்கு" என பேசினார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ