தமிழகத்தில் சிறப்பாக பணியாற்றிய 197 காவல்துறை அதிகாரிகளுக்கு ஜனாதிபதி, முதல்-அமைச்சர் பதக்கங்களை எடப்பாடி பழனிசாமி வழங்கினார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சிறப்பாகவும், மெச்சத்தகுந்த வகையிலும் பணிபுரிந்த காவல்துறை, சிறைத்துறை, தீயணைப்புத்துறை உள்ளிட்ட சீருடை பணியாளர்களுக்கு குடியரசுத்தலைவர், முதல்வர் பதக்கங்கள் வழங்கும் விழா சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் விளையாட்டு மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு வருகை புரிந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமியை குதிரைப்படை காவல்துறை அதிகாரிகளும், மோட்டார் சைக்கிள் காவல் படையினரும் அணிவகுத்து வரவேற்றனர்.


காவல்துறை மரியாதையினை ஏற்றுக்கொண்ட எடப்பாடி பழனிசாமி அவர்கள், தமிழகத்தில் சிறப்பாக பணியாற்றிய 197 சீருடை பணியாளர்களுக்கு பதக்கங்களை வழங்கினார். மொத்தம் 204 சீருடை பணியாளர்கள் பதக்கங்கள் பெறுவதற்காக தேர்வு செய்யப்பட்டிருந்த நிலையில், அவர்களில் 7 பேர் வராத காரணத்தால் 197 பேர் பதக்கங்களை பெற்றனர். 



விழாவில் பேசிய முதல்வர் அவர்கள் ஓய்வு பெற்ற காவலரின் நலனை கருத்தில் கொண்டு, ‘ஓய்வு பெற்ற காவல் துறையினருக்கான நலவாரியம்’ அமைக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அரசின் அறிவுரைகளை பின்பற்றி, பொதுமக்கள் ஒத்துழைப்புடன் இதுவரையில் 2 லட்சத்து 79 ஆயிரத்து 440 கண்காணிப்பு கேமராக்கள் தமிழ்நாடு முழுவதும் பொருத்தி குற்றங்கள் நடைபெறுவது பெருமளவு குறைக்கப்பட்டுள்ளது.


காவல்துறையில் பணியாற்றும் நீங்கள் மாறுபட்ட சிந்தனையோடு குற்றங்களுக்கு தீர்வு காண வேண்டும் என தெரிவித்தார்.


முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் பதக்கம் பெற்றவர்கள் பெயர் வருமாறு:-


  • ஊர்காவல் படை கூடுதல் டி.ஜி.பி. ராஜீவ்குமார், 

  • திருப்பூர் போலீஸ் கமிஷனர் க.மனோகரன், 

  • டி.ஐ.ஜி.க்கள் வனிதா (வேலூர்), 

  • கார்த்திகேயன் (கோவை), 

  • க.பவானீசுவரி (கடலோர பாதுகாப்பு குழுமம்), 

  • பி.கே.செந்தில்குமாரி (ரெயில்வே), 

  • ஆசியம்மாள் (தொழில்நுட்ப பிரிவு), 

  • ராதிகா (லஞ்ச ஒழிப்பு பிரிவு), 

  • லலிதா லட்சுமி (திருச்சி), 

  • துணை கமிஷனர்கள் மல்லிகா (சென்னை மத்திய குற்றப்பிரிவு), 

  • விமலா (சென்னை உளவுப்பிரிவு), 

  • சூப்பிரண்டுகள் சாமுண்டீஸ்வரி (சி.பி.சி.ஐ.டி.), 

  • லட்சுமி (லஞ்ச ஒழிப்பு பிரிவு), 

  • கண்ணன் (மாநில உளவுப் பிரிவு), 

  • பிரவீன் அபினபு (சி.பி.சி.ஐ.டி.), 

  • சரவணன் (கடலூர்), 

  • கண்ணம்மாள் (லஞ்ச ஒழிப்பு), 

  • மணி (போலீஸ் பயிற்சி), 

  • பாஸ்கரன் (தேனி), சண்முகம் (லஞ்ச ஒழிப்பு), 

  • உதவி ஐ.ஜி. முத்தரசி உள்ளிட்ட 31 பேர்.


தென்சென்னை கூடுதல் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் சிறந்த பொதுசேவைக்காக முதல்வர் விருதினை பெற்றார். தமிழக தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், உள்துறை கூடுதல் தலைமை செயலாளர் நிரஞ்சன் மார்டி, டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன் உள்ளிட்டோரிடம் 166 பேர் பதக்கங்களை பெற்றனர்.


சிறந்த புலனாய்வு பணிக்காக சென்னை மத்திய குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் எம்.கிளாஸ்டின் டேவிட் முதல்-அமைச்சரின் பதக்கத்தை பெற்றார். அவருக்கு ரூ.25 ஆயிரம் வெகுமதி வழங்கப்பட்டது. இவர் திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் உடற்கல்வியியல் கல்லூரியில் எம்.பி.எட். படித்துள்ளார். இவரது சொந்த ஊர் கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே உள்ள அம்பலக்காலை ஆகும். விழாவில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள், காவலர்கள் குடும்பத்தினர் கலந்து கொண்டனர். நிறைவில் போலீசாரின் கலைநிகழ்ச்சிகள், சாகச நிகழ்ச்சிகள் நடைப்பெற்றன.