மீண்டும் மதமாற்ற சர்ச்சை: இந்து கடவுள்களை அவமதித்தாரா ஆசிரியை? மாணவியின் பகீர் குற்றச்சாட்டு!
கன்னியாகுமரி அருகே அரசு பள்ளி ஆசிரியை மதமாற்றத்தில் ஈடுபடுவதாக மாணவி ஒருவர் குற்றம்சாட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
கன்னியாகுமரி மாவட்டம் கண்ணாட்டுவிளை பகுதியில் அமைந்துள்ளது அரசு மேல்நிலைப்பள்ளி. இந்த பள்ளியில் சுமார் 300 மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் தையல் கலை ஆசிரியராக பணியாற்றுபவர் ஆசிரியை பியாட்ரீஸ் தங்கம்.
தையல் வகுப்புக்கு வரும் இந்து மத மாணவிகளிடம் இந்து மத கடவுள்களை அவதூறாக பேசுவதோடு கிறிஸ்தவ மத பிராத்தனைகளை சொல்லி பிராத்தனை செய்ய வற்புறுத்துவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது.
இந்த நிலையில் நேற்றும் தையம் வகுப்பிற்கு சென்ற மாணவிகளிடம் ஆசிரியை மதம் மாற்ற நடவடிக்கையில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதனையடுத்து மாணவிகள் உடனடியாக தங்கள் பெற்றோருக்கு தகவல் அளித்துள்ளனர். மேலும், இரணியல் காவல்நிலையத்தில் புகார் அளித்த பெற்றோர்கள் உடனடியாக பள்ளிக்கு சென்று தலைமை ஆசிரியரிடமும் புகார் அளித்தனர்.
இதைத்தொடர்ந்து போலீஸார் மேற்கொண்ட விசாரணையில் ஆசிரியை பியாட்ரீஸ் தங்கம் மீது மாணவிகள் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். தலைமை ஆசிரியை முன் மாணவி ஒருவரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி புகழேந்தி அவர்களிடம் தொடர்பு கொண்டு விளக்கம் கேட்டபோது மதமாற்ற சர்ச்சை வீடியோ சம்பந்தமாக சம்பத்தப்பட்ட ஆசிரியையிடம் விசாரணை நடத்த மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும், இதற்காக மாவட்ட கல்வி அலுவலர் எம்பெருமாள் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளதாகவும் விசாரணைக்கு பின் துறைவாரி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தார்.
தஞ்சாவூரில் உள்ள ஒரு பள்ளியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இது போன்ற புகார் எழுந்தது. தற்போது கன்னியாகுமரி மாவட்டத்தில் இதே போன்ற சம்பவம் நடைபெற்றிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விவகாரம் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருவதால் கண்ணாட்டுவிளை அரசு பள்ளியில் மதமாற்ற முயற்சியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் தையல் ஆசிரியை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட கல்வி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
மேலும் படிக்க | கிறிஸ்தவ மதமாற்ற பின்னணியில் அன்னை தெரசா - பாஜக எம்.பி ஆதித்யநாத் குற்றச்சாட்டு