வேலூர்: ராஜூவ் காந்தி கொலைக் குற்றவாளியான நளினிக்கு நீதிமன்றம் ஒரு மாதம் பரோல் வழங்கியதை அடுத்து, வேலூர் மத்திய சிறையிலிருந்து நாளை பரோல் விடுப்பில் வெளியே வர உள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் உட்பட 7 பேர் 27 ஆண்டுகளுக்கு மேலாக தண்டனை அனுபவித்து வருகின்றனர். அவர்களை விடுதலை செய்யக்கோரி தமிழக கட்சிகள் போராட்டங்கள் நடத்தின. மேலும் பேரறிவாளன் உட்பட 7 பேரை விடுதலை செய்ய வேண்டும் என நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. 


இதையடுத்து நீதிமன்றம் அந்த 7 பேரை விடுவிக்கும் உரிமையை மாநில அரசிடம் ஒப்படைத்தது. இதன் பின்னர் 7 பேரையும் விடுவிக்கக்கோரி தமிழக அரசு ஆளுநருக்கு கடிதம் எழுதியது. ஆனால் தமிழக ஆளுநர் இன்னும் முடிவெடுக்காததால், அவர்களை விடுதலை செய்வதில் தொடர்ந்து தாமதமாகி வருகிறது.


ஏழு பேரில் ஒருவராகிய நளினி, மகள் திருமணத்துக்காக 6 மாதங்கள் பரோல் வழங்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். மேலும் நேரில் ஆஜராகி வாதிடவும் அனுமதி கேட்டிருந்தார். அதற்கு அனுமதி அளித்த நீதிமன்றம், பரோல் சம்பந்தமான வழக்கை கடந்த ஜூலை 5 ஆம் தேதி விசாரித்தது.


அப்பொழுது தமிழக அரசு தரப்பில், சிறை விதிகளின்படி 6 மாதம் பரோல் வழங்க முடியாது. பேரறிவாளனுக்கு பரோல் வழங்கியது போல ஒரு மாதம் தான் பாரோல் விடுப்பு வழங்க முடியும் எனக் கூறப்பட்டது.


நளினி தரப்பில், நேரில் வாதாட வாய்ப்பளித்த நீதிமன்றத்திற்கு கோடி நன்றிகள். எனக்கு தேவையான அனைத்து உரிமைகளையும் நீதிமன்றம் மூலம் பெற்றுள்ளேன். ராஜீவ் கொலையில் குற்றம் செய்யாமலேயே குற்றவாளி ஆக்கப்பட்டுள்ளோம். கடந்த 28 ஆண்டுகளாக சிறையில் உள்ளோம். தாயாக ஒரு மகளுக்கு செய்ய வேண்டியதை, இதுவரை நாங்கள் செய்யவில்லை. எனவே எனக்கு 6 மாதம் பரோல் வழங்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்தார்.


இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், 6 மாதங்கள் பரோல் வழங்க சட்டத்தில் இடமில்லை எனக்கூறி, நளினிக்கு ஒரு மாதம் பரோல் வழங்கி உத்தரவிட்டார்.


இந்தநிலையில், நாளை வேலூர் மத்திய சிறையிலிருந்து நளினி பரோல் விடுப்பில் வெளியே வருகிறார். வேலூரில் சிங்கராயன் என்பவர் வீட்டில் தங்கும் அவர், தனது மகள் திருமண நிகழ்ச்சியில் கலந்துக்கொள்வார் என்பது குறிப்பிடத்தக்கது.