கொரோனா வைரஸ் தொடர்பாக மத்திய அரசின் நிதியுதவியை விரைந்து வழங்க நடவடிக்கை வேண்டும் என்று தெரிவித்து பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அறிக்கை வெளியிட்டுள்ளார்

 

கொரோனா வைரஸ் பரவல் அச்சம் மற்றும் அதைத் தொடர்ந்து அறிவிக்கப்பட்ட ஊரடங்கு ஆணையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மத்திய அரசின் சார்பில் அறிவிக்கப்பட்ட நிதியுதவி, பயனாளிகளைச் சென்றடைய நீண்ட தாமதம் ஆகும் என்று வெளியாகியுள்ள செய்திகள் கவலையை ஏற்படுத்துகின்றன.  வாழ்வாதாரம் இழந்த ஏழைகளுக்கு உதவும் விஷயத்தில் தாமதம் செய்வது, உதவியின் நோக்கத்தையே சிதைத்து விடும்.

 

கொரோனா வைரஸ் அச்சத்தால் வாழ்வாதாரத்தை இழந்த மக்களுக்கு மத்திய, மாநில அரசுகள் தனித்தனியாக நிவாரண உதவிகளை அறிவித்துள்ளன. தமிழக அரசின் சார்பில் அறிவிக்கப்பட்ட உணவுப் பொருட்கள் மற்றும் நிதியுதவிகள் நாளை மறுநாள் முதல் பயனாளிகளுக்கு வழங்கப்படவுள்ளன. ஆனால், மத்திய அரசின் சார்பில், கொரோனா வைரசால் வாழ்வாதாரத்தை இழந்த மக்களுக்கு அறிவிக்கப்பட்ட உணவு தானியங்களும், நிதியுதவியும் எப்போது வழங்கப்படும் என்பதற்கான அறிகுறிகள் கூட தென்படவில்லை.

 

தமிழக அரசின் உதவித் திட்டங்கள் ஒரே கட்டமாக வழங்கப்படவுள்ள நிலையில், மத்திய அரசின் நிவாரணத் திட்டம் அடுத்த மூன்று மாதங்களுக்குப் பகிர்ந்து அளிக்கப்படவுள்ளது. மொத்தம் 80 கோடி ஏழைகளுக்கு அடுத்த 3 மாதங்களில் ரூ. 1.70 லட்சம் கோடி மதிப்புள்ள உதவிகளை மத்திய அரசு வழங்கியாக வேண்டும். இந்த உதவிகளில் பெரும்பாலானவை பயனாளிகளின் வங்கிக் கணக்குகளின் நேரடி பயன் மாற்ற முறையில் செலுத்தப்பட வேண்டும். ஆனால், பயனாளிகளுக்கான நிதியுதவியை அவர்களின் வங்கிக் கணக்குகளில் செலுத்துவதில் பல்வேறு சிக்கல்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது.

 

முதல்கட்டமாக, நிதியுதவியைச் செலுத்துவதற்கான வங்கிக் கணக்குகளில் 75% கணக்குகள் மட்டுமே ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ளன. ஆதாருடன் இணைக்கப்படாத வங்கிக் கணக்குகளில் பணத்தைச்  செலுத்த முடியாது என்று இத்திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான அதிகாரிகள் கூறியுள்ளனர். மேலும்,  பயனாளிகளில் கணிசமானவர்களுக்கு இதுவரை வங்கிக் கணக்கே இல்லை என்று தெரியவந்துள்ளது.  

 

தொலைதூர கிராமங்களில் உள்ள மக்கள் மின்னணு பணப்பரிமாற்ற முறையை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்பதால் அவர்களுக்கு வங்கி ஏ.டி.எம்கள் மூலமாகவோ, வங்கி முகவர்கள் மூலமாகவோ பணமாகத் தான் கொடுக்க வேண்டியிருக்கும். அவ்வாறு வினியோகிக்க வேண்டியுள்ள தொகையில் பெரும்பகுதி கிராமங்களில் தான் வினியோகிக்கப்பட வேண்டியுள்ளது. ஆனால், இந்தியாவில் மொத்தமுள்ள 2.30 லட்சம் ஏ.டி.எம் எந்திரங்களில் வெறும் 43 ஆயிரம் எந்திரங்கள் மட்டுமே ஊரகப்பகுதிகளில் உள்ளன. அதுமட்டுமின்றி, ஊரடங்கு ஆணை நடைமுறையில் இருக்கும் நிலையில் கிராமப்புறங்களில் உள்ள ஏ.டி.எம். மையங்களுக்குப்  பணத்தைக் கொண்டு செல்வதோ, வங்கி முகவர்கள் மூலம் பணத்தை வழங்குவதோ உடனடியாக சாத்தியம் இல்லை என்று வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ள நிலையில், மத்திய அரசின் நிதியுதவி ஏழைகளை எப்போது சென்றடையும் என்பதை எவராலும் துல்லியமாகக் கூற முடியாது என்ற நிலை தான் நிலவுகிறது.

 

விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6,000 வழங்கும் திட்டத்தின் பயனாளிகள் பட்டியல் மட்டும் தான் அவர்களின் வங்கிக் கணக்குகளுடன் இணைக்கப்பட்டு துல்லியமாகப் பராமரிக்கப்படுவதாகவும், அதனால் அவர்களுக்கு மட்டும் முதல் தவணையாக ரூ.2000 சில நாட்களில் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. மத்திய அரசு அறிவித்துள்ள நிதியுதவிகள் விழாக்காலங்களில் வழங்கப்படும் சலுகைகள் அல்ல. அவ்வாறு இருந்தால் அது காலதாமதமாக வழங்கப்பட்டால் கூட, அதை ஏழை மக்களால் தாங்கிக் கொள்ள முடியும்.

 

ஆனால், ஊரடங்கு காரணமாகக் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக அடித்தட்டு மக்களால் எந்த வேலைக்கும் செல்ல முடியவில்லை. கையிலிருந்த சேமிப்புகள் அனைத்தும் கடந்த 10 நாட்களில் கரைந்து விட்ட நிலையில், அடுத்த வேளை உணவுக்கு வழியில்லாமல் தான் அவர்கள் தவித்துக் கொண்டிருக்கின்றனர்.  இந்த நேரத்தில் அவர்களுக்கான உதவி என்பது, உடுக்கை இழந்தவன் கைகள் எவ்வளவு விரைவாகச் செயல்படுமோ, அவ்வளவு விரைவாக வழங்கப்பட வேண்டும். மணிக்கணக்கில் தாமதம் செய்தால் கூட அது வாழ்வாதாரம் இழந்த ஏழைகளின் வாழ்க்கையில் பெரும் துன்பத்தையும், துயரத்தையும் ஏற்படுத்தி விடும்.

 

எனவே, என்னென்ன மாற்று ஏற்பாடுகளைச் செய்ய முடியுமோ, அவை அனைத்தையும் செய்து அடுத்த ஒரு வாரத்திற்குள் முதல் தவணை உணவு மற்றும் நிதியுதவி ஏழை மக்களுக்கு வழங்கப்படுவதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும். வங்கிக் கணக்குகள் இல்லாதவர்களுக்கும், ஆதாருடன் வங்கிக் கணக்கை இணைக்காதவர்களுக்கும், இந்த ஒரு முறை மட்டும் விலக்களித்து, நிதியுதவியை வங்கிக் கணக்கில் செலுத்துவதற்குப் பதிலாக ரொக்கமாக வழங்க வேண்டும். தேவைப்பட்டால் மாநில அரசின் உதவியையும், கட்டமைப்பையும் கேட்டுப் பெறுவதற்கும் மத்திய அரசு தயங்கக்கூடாது என வலியுறுத்துகிறேன் என்றார்.