தேனியில் ஒரே நாளில் 16 பேருக்கு கொரோனா.. கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
தேனி மாவட்டத்தில் நேற்று நிலவரப்படி 23 பேருக்கு பாதிப்பு இருந்தது. இன்று ஏற்பட்டுள்ள பாதிப்பு எண்ணிக்கையின் அடிப்படையில் தேனி மாவட்டத்தின் மொத்த பாதிப்பு 39 ஆக உயர்ந்துள்ளது.
சென்னை: ஊரடங்கு உத்தரவின் 15வது நாளான இன்று, தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 738-ஆக அதிகரித்துள்ளது. அதில் முதலிடத்தில் 156 என சென்னை உள்ளது. அதேநேரத்தில் தேனி மாவட்டத்தில் மட்டும் இன்று ஒரே நாளில் 16 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டு உள்ளனர். அதில் 12 பேர் பெண்கள் என்பது அதிர்ச்சி அளிக்கிறது. இவர்கள் அனைவரும் டெல்லி நிஜாமுதீன் மாநாட்டிற்குச் சென்று திரும்பியவர்களின் உறவினர் மற்றும் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர்கள்.
இதனையடுத்து தேனி மாவட்டத்தில் நேற்று நிலவரப்படி 23 பேருக்கு பாதிப்பு இருந்தது. இன்று ஏற்பட்டுள்ள பாதிப்பு எண்ணிக்கையின் அடிப்படையில் தேனி மாவட்டத்தின் மொத்த பாதிப்பு 39 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 2 நாட்களாக மாவட்டத்தில் பாதிப்பு இல்லாத நிலையில், இன்று ஒரே நாளில் அதிகரித்து இருப்பது, அந்த மாவட்ட மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் மாவட்டம் முழுவதும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
நமது மாநில அளவில் மொத்த நேர்மறையான வழக்குகளின் எண்ணிக்கையை 738 ஆக அதிகரித்துள்ளது. தற்போது வரை கிடைத்த தகவலின் படி, இன்று மட்டும் தமிழகத்தில் 48 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. மேலும் 21 நோயாளிகள் இதுவரை குணமடைந்துள்ளனர் மற்றும் 8 பேர் இந்த நோயால் மாநிலத்தில் இறந்துள்ளனர் எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக இன்று செய்தியாளர்களிடம் பேசிய தமிழக சுகாதார செயலாளர் டாக்டர் பீலா ராஜேஷ், புதிய 48 வழக்குகளில், 42 நபர்களின் தொற்று ஒரே மூல நிகழ்விலிருந்து பெறப்பட்டுள்ளது. அதாவது மார்ச் 8 முதல் மார்ச் 21 வரை புதுடெல்லியில் நடைபெற்ற தப்லிகி ஜமாஅத் மாநாட்டில் இருந்து பெறப்பட்டுள்ளது. 42 புதிய வழக்குகளில், 8 பேர் ஒரு குழுவாகப் பயணம் செய்தவர்கள். மேலும் 33 பேர் அவர்களது தொடர்புகள் என்றும் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.