திமுக அரசில் ஊழல் தலைவிரித்து ஆடுகிறது... ஆனால் முதல்வருக்கு தொடர்பில்லை - அண்ணாமலை!
திமுக அரசில் மருத்துவம் மற்றும் வீட்டு வசதித்துறையில் ஊழல் மற்றும் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று தெரிவித்தார்.
தமிழகத்தில் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வலியுறுத்தி சென்னையில் பாஜக சார்பில் கடந்த 31-ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை திமுகவை சேர்ந்த 2 அமைச்சர்களின் ஊழல் பட்டியலை ஜூன் 5-ம் தேதி வெளியிட உள்ளதாக அறிவித்தார். அதன்படி, கமலாலயத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை திமுக அரசில் லஞ்சம் ஊழல் தலைவிரித்தாடுவதாக குற்றம்சாட்டினார். இது குறித்து அவர் பேசியதாவது:-
திமுகவின் திராவிட மாடல் ஆட்சியில் லஞ்சம் ஊழல் தலைவிரித்து ஆடுகிறது. இதில் முதல்வர் குடும்பத்திற்கும் தொடர்பு உள்ளது. அதிமுக ஆட்சி காலத்தில் கொண்டுவரப்பட்ட கர்பிணிகளுக்கான அம்மா Nutrition கிட், வெறுமனவே Nutrition கிட் என தற்போது அழைக்கப்படுகிறது. அதில் இடம்பெற்றுள்ள Pro pl health mix எனும் தனியார் நிறுவன பொருளுக்கு பதிலாக ஆவின் நிறுவனத்தின் health mix பயன்படுத்தலாம் என துறை அதிகாரிகள், திட்டக்குழுவினர் மார்ச் மாதம் பரிந்துரை செய்துள்ளனர்.
கர்ப்பிணிகளுக்காக 2 ஆண்டுகளுக்கு 23,88,000 ஆயிரம் கிட்களை தமிழக அரசு வாங்குகிறது. இதில் அனிதா டிக்ஸ் காட் மூலம் கர்ப்பிணிகளுக்கு 8 பொருட்கள் வழங்கப்படுகிறது. அனிதா டிக்ஸ் காட் நிறுவனத்திற்கு 450 கோடிக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது. பொங்கல் தொகுப்பில் குளறுபடிகளை செய்யதும் இந்த நிறுவனம் தான். ஆவினுக்கு வழங்காமல் pro pl health mix-க்கு மீண்டும் கொடுத்ததால் தமிழக அரசுக்கு ரூ.45 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிறுவனம் சார்பில் ரூ.100 கோடி பணம் கைமாறியுள்ளது. அது யாருக்கெல்லாம் சென்றிருக்கும் என்பது இனிதான் தெரியவரும். கர்ப்பிணிகளுக்கான கிட்டில் 2 பொருட்களை தனியார் நிறுவனத்தில் வாங்கியதில் தமிழக அரசுக்கு மொத்தம் ரூ.77 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது..
சென்னை CMDA தற்போது G Square முன்னேற்றக் கழகமாக மாறி உள்ளது. நிலத்தை பதிவு செய்வதற்கு குறைந்தபட்சம் 200 நாள் ஆகும். ஆனால் G square கோவையில் 122 ஏக்கர்களுக்கான லே அவுட்டை 8 நாட்களிலேயே பெற்றுள்ளனர். G Square-ன் 15 பெரிய மனைநில வளர்ச்சிப் பணிகளை 20 நாளுக்குள் செய்துள்ளனர். திமுகவின் விஞ்ஞான ஊழல் இது. CMDA-வில் ஆன்லைன் மூலம் பதிவு செய்யலாம் என திமுக ஆட்சிக்கு வந்தவுடன் கூறியது. ஆனால் G square பதிவு செய்யும் நேரத்தில் மட்டுமே ஆன்லைன் பதிவு Open-ல் இருக்கிறது. G Square க்கு உதவ திமுகவினர் CMDA-வில் , CEO எனும் புதிய பொறுப்பை உருவாக்கியுள்ளனர். ஐதராபாத், பெங்களூரில் G square 6 எனும் நிறுவனத்தை புதிதாக தொடங்கியுள்ளனர். இந்த நிறுவனத்திற்கு ஆதரவாக செயல்படும் வீட்டுவசதித்துறை அமைச்சர் முத்துசாமி விளக்கம் அளிக்க வேண்டும். Sun Shine Holding India , Llp Hyderabad , Max Space , Mannorr White Field போன்ற நிறுவனங்கள் G Square சார்பில் பதிவு செய்யப்பட்டுள்ளன.
மேலும் படிக்க | 2026 தேர்தலில் பாஜக சார்பில் 150 எம்.எல்.ஏ.க்கள் வெல்வார்கள் - அண்ணாமலை நம்பிக்கை
திமுகவிற்கு , முன்னர் 2G முடிவுரை எழுதியது போல, தற்போது G Square என்ன செய்யப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். ஆவின் பொருட்களை புறக்கணித்தது தொடர்பாக லஞ்ச ஒழிப்பு, அமலாக்கத்துறையில் புகாரளிக்க உள்ளோம். நடவடிக்கை இல்லை எனில் நீதிமன்றத்தை நாடுவோம். G Square குறித்து குற்றம்சாட்டினால் பத்திரிகையாளர்கள் மீது கூட அவசரம் காட்டி வழக்கு பதிகின்றனர். பாஜக இதை எதிர்கொள்ள தயாராக இருக்கிறது. செய்தித்தாள் விளம்பரங்களில் G Square விளம்பரம்தான் இருக்கிறது. அவர்களை தவிர யாருக்கும் பெரிய அளவிலான மனைநிலங்கள் பதிவு செய்யப்படுவதில்லை.
அம்மா Nutrition-கிட் மா.சுப்பிரமணியனின் துறைதான் என்றாலும் அவர் மீது நாங்கள் புகார் வைக்கவில்லை. ஏனெனில் இரு தனி நபர்கள் இதில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் இதுதொடர்பாக அமைச்சர் கமிஷன் பெற்றாரா? என தெளிவுபடுத்த வேண்டும். அதேநேரம் G Square விவகாரத்தில் அமைச்சர் முத்துசாமி மீது நேரடி குற்றச்சாட்டை முன்வைக்கிறோம். இந்த முறைகேடுகளில் எல்லாம் முதலமைச்சர் சம்பந்தப்பட்டுள்ளார் என நான் சொல்லவில்லை. அதே நேரம் இந்த விவகாரங்கள் முதல்வர் தலையிட்டிருக்க வேண்டும். இந்த ஊழலில் முதலமைச்சரின் குடும்பத்திற்கு தொடர்பு உள்ளது. எனவே, இதில் முதலமைச்சர் கவனம் செலுத்த வேண்டும். பொங்கல் தொகுப்பில் ஊழல் செய்த நிறுவனத்தை முதல்வர் இன்னும் ஏன் தடை செய்யவில்லை. 20-ம் தேதிக்கு மேல் திமுகவின் ஊழல், சட்ட மீறல் செயல்பாடுகள் குறித்து புத்தகமாக ஆளுநரிடம் வழங்க உள்ளோம். நான் வெளியிட்டுள்ள ஆவணங்கள் அனைத்தும் அரசுத் துறைகளுக்குள் இருக்கும், அரசு ஊழியர்கள் மூலமே நாங்கள் பெற்றோம்.
அதிமுகவை அழித்துதான் பாஜக வளர வேண்டும் என்ற எண்ணம் எங்களுக்கு கிடையாது. பல முக்கிய மசோதா நிறைவேற அதிமுக எங்களுக்கு துணையாக இருந்தது. தமிழகத்தில் 20% மக்கள் தேசிய அரசியலுக்கு ஆதரவாக உள்ளனர். அதிமுக குறித்து எங்களது கட்சியினர் தலைமையின் உத்தரவு இல்லாமல் எந்த கருத்தையும் பேசக்கூடாது என கூறியுள்ளோம். அதிமுகவுடன் எங்களுக்கு சண்டை சச்சரவு கிடையாது. எங்களது கட்சி குறித்து அதிமுகவினர் சிலர் தவறான கருத்தை கூறினாலும் ஓபிஎஸ், இபிஎஸ் அதை ஏற்க மாட்டார்கள்.
சீமானுக்கு அவரது கட்சியை முதலிடம் கொண்டுவர ஆசை இருப்பதுபோல, தமிழகத்தில் பாஜகவை முதலிடம் கொண்டுவர எனக்கும் ஆசை இருக்கிறது. 2024 நாடாளுமன்ற தேர்தலில் சீமான் எங்களது பக்கம் சாய்ந்து தனது கோரிக்கையை நிறைவேற்ற முயற்சித்தால் கூட சரியான முடிவாகவே இருக்கும். இலங்கை மக்களுக்கு நல்லது செய்ய மோடியால் மட்டும்தான் முடியும் என்பது சீமானுக்கும் தெரியும். குறு சிறு நிறுவனங்கள் அதிகமிருப்பது தமிழகத்தில்தான். எனவே லூலூ மால் இங்கு தேவை கிடையாது. பிகார், உத்தரபிரதேசத்துக்கு வேண்டுமானால் அந்த நிறுவனம் தேவைப்படலாம். லூலூ வந்தால் அண்ணாச்சி கடைகள் கூட காணாமல் போய்விடும்.
இவ்வாறு அண்ணாமலை தெரிவித்தார்.
மேலும் படிக்க | வெளிநாடுகளில் இருந்து பல கோடி ரூபாய் மதிப்புள்ள ஐம்பொன்சிலைகள் மீட்பு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR