தமிழகத்தில் நடைபெற்று வரும் ஊழலை கண்டித்து திமுக சார்பில் மாநிலம் முழுவதும் உள்ள மாவட்டத் தலைநகரங்களில் இன்று காலை முதல் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. இந்த ஆர்ப்பாட்டங்களில் ஏராளமான தி.மு.க. தொண்டர்கள் பங்கேற்று அ.தி.மு.க. அரசுக்கு எதிராக கண்டன கோ‌ஷங்களையும் முழக்கங்களையும் எழுப்பினர். ஊழல் செய்த அதிமுக அமைச்சர்கள் பதவி விலகக்கோரி கோ‌ஷங்கள் எழுப்பப்பட்டன. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதன் ஒருபகுதியாக சேலத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமை தாங்கினார். அங்கு பேசிய மு.க.ஸ்டாலின், நீயா? நானா? என போட்டி போட்டுக்கொண்டு ஊழல் செய்யும் (அதிமுக) ஊழல் பேர்வழிகளான முதலமைச்சர், துணை முதலமைச்சர், அமைச்சர்கள் மற்றும் அவர்களுடைய உறவினர்கள், பினாமிகள், இதற்குத் துணை போய்க் கொண்டிருக்கும் அதிகாரிகள் என அனைவரும் திமுக ஆட்சி அமைந்தவுடன் சிறைக்குச் செல்வார்கள் என்பது உறுதி என பேசினார்.


திமுகவின் ஆர்ப்பாட்டத்தை குறித்து தமிழக மாநில பிஜேபி தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், 


திமுக ஆர்ப்பாட்டம் இன்று ஊழலுக்கு எதிராகவாம்! விஞ்ஞானபூர்வமான ஊழல் விஞ்ஞானிகள் என சர்க்காரியா கமிஷனால் கூறப்பட்டவர்கள் ஊழல் எதிர்ப்பு போராட்டமாம்! தமிழகத்தை பல ஆண்டுகள் கொள்ளை அடித்தவர்கள் கொள்ளை அடிப்பதைப்பற்றி போராடுகிறார்களாம்" எனக் கருத்து தெரிவித்துள்ளார்.