கொடுங்குற்றவாளி திருநாவுக்கரசுவை 4 நாள் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி
நான்கு நாட்கள் திருநாவுக்கரசுவை காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
பொள்ளாச்சியில் பள்ளி, கல்லூரி மாணவிகள், வேலைக்குச் செல்லும் இளம் பெண்கள், குடும்ப பெண்கள் என நேரிலும் முகநூலிலும் பழகி நட்பாக ஆசைவலையில் விழவைத்து, நம்பவைத்து ஏமாற்றி தனியாக அழைத்து சென்று அவர்களை அடித்தும் துன்புறுத்தியும் கதறக்கதற பாலியல் வன்கொடுமை செய்து நாசமாக்கி, அந்த சம்பவத்தை காணொளியாக எடுத்து, அதைக்கொண்டு அவர்களை மிரட்டி பணம் பறித்ததுடன், அவர்களை மீண்டும் பாலியல் வன்புணர்வுக்கு கட்டாயப்படுத்தி உள்ளனர்.
அந்த கொடூர சம்பவத்திற்கு காரணமான 4 குற்றவாளிகளான சபரிராஜன், திருநாவுக்கரசு, சதீஷ், வசந்தகுமார் மீதும் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர். பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிசிஐடி அமைப்புக்கு மாற்றப்பட்டது.
பின்னர் இதுகுறித்து சிபிசிஐடி ஐஜி ஸ்ரீதர் கூறுகையில், முதலில் இந்த சம்பவத்தில் கைதாகி உள்ள நான்கு பேரை காவலில் எடுத்து விசாரணை மேற்கொள்ளப்படும். பின்னர் அவர்கள் அளிக்கும் வாக்குமூலத்தின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு, இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும். முற்றிலும் நேர்மையான முறையில் விசாரணை மேற்கொள்ளப்படும் எனக்கூறி இருந்தார்.
இந்தநிலையில், இன்று இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள திருநாவுக்கரசரை 15 நாள் காவலில் எடுத்து விசாரிக்க கோவை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீசார் மனுத்தாக்கல் செய்தனர். பாதுகாப்பு கருதி காணொலிக் காட்சி மூலம் திருநாவுக்கரசு நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டார். இதனையடுத்து நான்கு நாட்கள் திருநாவுக்கரசுவை காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.