சென்னை: தேனி தொகுதியில் வெற்றி பெற்ற அதிமுக எம்.பி. ரவீந்திரநாத்தின் வெற்றி செல்லாது என அறிவிக்கக் கோரிய வழக்கில் இரவீந்திரநாத் குமாருக்கு சென்னை உயர்நீதிமன்றம் கெடு விதித்துள்ளது. அதாவது ஜனவரி 23 ஆம் தேதிக்குள் நீதிமன்றத்தில் வழக்கு சம்பந்தமாக பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என இறுதி கெடு விதித்து உத்தரவிட்டுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

2019 மக்களவை தேர்தலில் அதிமுக சார்பில் தேனி தொகுதியில் தமிழக துணை முதலவரின் மகனான இரவீந்திரநாத் குமார் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதிமுக கூட்டணியில் வெற்றி பெற்ற ஒரே எம்.பி. இவர் தான். இவர் வெற்றி பெற்றதும் மற்ற கட்சியினர் சந்தேகத்தை எழுப்பினார்கள். மேலும் வாக்கு எண்ணுவதற்கு முன்பாக தேனி தொகுதி குறித்து பல செய்திகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


இந்தநிலையில், ரவீந்திரநாத் எம்பியின் வெற்றியை செல்லாது என அறிவிக்க கோரி, அத்தொகுதி வாக்காளர் மிலானி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அப்பொழுது நடைபெற்ற நீதிமன்ற விசாரணையில் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என ரவீந்திரநாத் குமாருக்கு நீதிமன்றம் கூறியது. ஆனால் இவ்வளவு காலம் ஆகியும் பதில் மனு தாக்கல் செய்யபப்டவில்லை. 


இதனையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாரர் மிலானி தரப்பில் புதிய மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில் இதுவரை அதிமுக எம்பி ரவீந்திரநாத் பதில் மனு தாக்கல் செய்யவில்லை. இது வழக்கை இழுத்தடிக்கும் நோக்கில் செய்யப்படுகிறது. இதனால் அவர் பதில் மனு தாக்கல் செய்யும் வரை, அவரது எம்.பி. பதவியை தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும் என்றும் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.


இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்பொழுது நீதிபதி எம்.எஸ்.ரமேஷ், வரும் ஜனவரி 23 ஆம் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என தேனி தொகுதியில் வெற்றி பெற்ற அதிமுக எம்.பி. ரவீந்திரநாத் குமாருக்கு இறுதி கெடு விதித்தது, இந்த வழக்கையும் அன்றைய தேதிக்கு ஒத்தி வைத்தார்.